உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

53

புத்துரை கண்டார் சண்முகனார். இதனாலேதான், "இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவராம் சண்முகனார் இவ்வுலகுக்குத் தந்து சென்ற பொருள்கள் மூன்று. அவை தொல்காப்பியச் சண்முக விருத்தி, திருக்குறள் சண்முக விருத்தி, பெரும் பேராசான் பண்டிதமணி" என்று ஆய்ந்தோர் நயம் பெற உரைப்பர்.

2. தொல்காப்பியச் சண்முக விருத்தி

பதினைந்து வரிகளையுடையதும், ஆசிரியர் தொல் காப்பியர் உடன்மாணவராக இருந்த பனம்பாரனாரால் தொல்காப்பியத்திற்குப் பாயிரமாகப் பாடியளிக்கப் பட்டதுமான வட வேங்கடம் தென்குமரி" என்னும் பாடலுக்கும் தொல்காப்பியமுதற் சூத்திரத்திற்கும் மட்டும் 246 பக்க அளவில் விருத்தியுரை எழுதியுள்ளார் சண்முகனார். தொடர்ந்து, நூல் மரபு, மொழிமரபு, பிறப்பியல் ஆகியவற்றுக்கும் விருத்தி எழுதியுள்ளார். நிறை நாள் வாழ்ந்து குறைவறாப் புலமையால் ஒல்காப்புலமைத் தொல்காப்பியத்திற்கு முற்றமுடிய உரை எழுதியிருப்பாரேல், ஐயோ! அதன் சிறப்பை என்னென்பது! கிடைத்த அளவுக்கேனும் மகிழ வேண்டியதுதான்.

பாயிர விருத்தி சண்முகனார் ஆராய்ச்சி வன்மைக்குச் சான்றாக மிளிர்கின்றமை கண்கூடு. இவை மேற்கோள் காட்டி விளக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஒன்றே இவர்தம் புலமைப் பரப்பினைக் காட்டத் தவறாது. பாயிரத்தினை விளக்குவதற்கு 164குறட்பாக்களைத் தகவுறச் சுட்டியும் விளக்கியும் செல்கின்றார் எனில் இவர்தம் திருக்குறட் புலமையையும் பற்றினையும் என்னென்பது!

தொல்காப்பியச் சண்முகவிருத்தி "அக்கீம்" துரை யவர்கள், தமக்குச் செய்த உயிருதவியின் நினைவாக உரிமை செய்யப்பெற்று, அரிமள நகர வணிகப் பெருமக்கள் பொருளுதவியால், தஞ்சையில் 1905 ஆம் ஆண்டு அரித்துவார மங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியாரவர் களால் பதிப்பிக்கப் பெற்றமை முன்னரே அறிந்ததாம்.

3. தொல்காப்பிய நுண்பொருட் கோவை

தொல்காப்பிய ஆராய்ச்சியின் விளைவால் தோன்றிய மற்றுமொரு நூல் இது. பெரும்பாலும் உரையாசிரியர்கள் உரை வேற்றுமைகளை விளக்கி உண்மை உரை இதுவே எனத் தெளிவிக்குமாறு எழுந்த ஆராய்ச்சி நூலாகும். 1903 ஆம் ஆண்டில்