உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மொழி பெயர்ப்பாளர் பணி

ஆங்கிலவர் இந்திய நாட்டை ஆளத் தொடங்கிய காலம் தொட்டு நீதிமன்றம் முதலியவற்றில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்கும் பணி ஒன்று உருவாகியது. வேதநாயகர் அப்பணியில் ஈடுபட்டுச் செய்த தொண்டுகளை இவண் அறிவோம்.

வேதநாயகர் தம் இருபத்திரண்டாம் அகவையில் நீதிமன்றத்தில் பத்திரப் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். அப்பொழுது திருச்சி, மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவர் வேண்டியிருந்தார். அவ்வேலைக்கு விண்ணப்பம் செய்தார் வேதநாயகர். அவர் விரும்பியவாறே அவ்வேலையும் அவர்க்குக் கிட்டியது.

மொழிபெயர்ப்பு வேலை சிக்கல் நிறைந்ததாகவும், அளவுக்கு மிஞ்சியதாகவும் இருந்தது. நீதிமன்ற நடவடிக்கை களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற கலைச் சொற்கள் வேண்டும். அச் சொற்களும் கருத்து வேற்றுமைக்கும் முரண் பாட்டுக்கும் இடம் அளிக்காதவையாக இருத்தல் வேண்டும். இந்நாளில் கூட நீதிமன்ற நடவடிக்கைகளை மொழி பெயர்ப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ள போது அந்நாளில் வேதநாயகர் பெரும் பாடுபட்டிருக்க வேண்டும். ஆயினும் சிக்கலான முடிவுகளையும் சட்ட நுணுக்கம் தவறாமல் மூலத்திற்கு ஏற்றவாறு மொழி பெயர்த்தார். பிறர் பாராட்டும் மொழிபெயர்ப்பாளியாகத் திகழ்ந்தார்.

நீதிமன்ற மொழிபெயர்ப்புப் பணியுடன் தம் கடமையை நிறுத்திக் கொண்டார் அல்லர் வேதநாயகர். ஆங்கிலம் அறியாத மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளையும், சட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.சதர் நீதிமன்றத்தில் 1805 முதல் 1861-ஆம் ஆண்டு வரை செய்யப் பெற்ற முடிவுகளை யெல்லாம் ஒருங்கு திரட்டி மொழிபெயர்த்து 1862ஆம் ஆண்டில் 'சித்தாந்த சங்கிரகம்' என்னும் பெயரால் நூலாக வெளியிட்டார். பின்னர் 1862.1863-ஆம் ஆண்டு நீதிமன்ற முடிவுகளைத் தமிழாக்கம் செய்து 1864ஆம் ஆண்டில் வெளியிட்டார்.