உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

இந்நாளில் வழக்கு மன்றங்கள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்னும் கருத்து உருவாகியுள்ளது. சட்டங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப் பெறல் வேண்டும் என்றும் முடிவு செய்யப் பெற்றுள்ளது. அதற்குரிய முயற்சிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் முன்னரே இச்சீரிய எண்ணத்தால் உந்தப் பெற்றுத் தன்னந்தனியாக நின்று பணிசெய்த பெருமை வேதநாயகரையே சாரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

குற்ற வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும்போது நீதிபதியுடன் 'காசியார் பத்துவாக்' கொடுப்பதும் அந்நாளில் வழக்கமாக இருந்தது. நீதிபதி முடிவும், காசியார் முடிவும் மாறுபாடு உடையதாயின் அவ்வழக்குகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் 'சதர்க்கோர்ட்டார் முடிவுக்கு அனுப்புதல் வேண்டும் என்பது விதி. அத்தகைய வழக்கு ஒன்றை மொழி பெயர்த்த வேதநாயகர் நீதிபதியின் கையொப்பத்திற்காகத் தந்தார். நீதிபதி டேவிட்சன் என்பார், அவர் வேற்றூர் மாற்றிச் செல்லும் நிலைமையில் இருந்ததால், பார்த்துக் கையொப்பமிட்டு அனுப்புவதாக மொழிபெயர்ப்பை எடுத்துச் சென்றார். ஆனால், டேவிட்சன் நினைப்பு நிறைவேறவில்லை. அவர் போன இடத்தில் மாண்டு போனார். மொழிபெயர்ப்பு வாராத குற்றம் வேதநாயகர் மேல் வீழ்ந்தது.

வேதநாயகர் பணியாற்றிய நீதிமன்றத்திற்குப் புதிதாக வந்திருந்த நீதிபதி மிக முன் கோபக்காரர். அவரே, வேதநாயகரைக் குற்றவாளியாக்கத் துடித்தார்; வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று மேல் மன்றத்தை வேண்டி அதில் வெற்றியும் கண்டார். வேதநாயகர்க்குத் தொல்லைகள் அடுக்கடுக்காய் வந்தன. தத்திருமல் நோய் வாட்டியது; ஒருநாள் பாம்பு தீண்டிவிட்டது; வண்டி குடை சாய்ந்தது! ஆயினும் சிறிதும் தளராது நிமிர்ந்து நின்றார். தம் மேல் குற்றம் இல்லாமையைத் தெளிவாக விளக்கினார். இந்நிலையில் டேவிட்சன் பெட்டியில் இருந்த மொழிபெயர்ப்பும் கிட்டியது. ஆகவே வேதநாயகர்க்கு மீண்டும் வேலை கிட்டியது. அதனையும் பலவழிகளிலும் தடுத்தார் நீதிபதி. அவர் இங்கிலாந்து சென்ற பின்னரே அவ்வேலை வாய்க்கப்பெற்றார் வேதநாயகர்.

"பட்ட காலிலே படும்' என்பது பழமொழி. மொழிபெயர்ப்பாளராக இருந்த நாளில் வேதநாயகர் பட்ட துயர் பெரிது. எனினும் துணிவாக நின்று அத்துயரை ஓட்டினார். 'முயற்சி திருவினை ஆக்கும் அன்றோ!