உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. முன்சீப் வேதநாயகரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும்

வேதநாயகர் அறிஞர்; புலவர்; பாவலர். மீனாட்சி சுந்தரர் மகாவித்துவான்; நடமாடும் சுவடிச்சாலை; கவிஞர் கோமான்! இவர்கள் தொடர்பு புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்" என்பதுபோல் தோன்றிற்று.

மீனாட்சிசுந்தரர் வேதநாயகரைக் காண்பதற்கு முதன் முறையாகச் சென்றார். "செய்தித் தாளில் தங்களைப் பற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன்" என்னும் வரவேற்புடன் களிப்புற்றார் வேதநாயகர். முதற்காட்சியே முழுமைக் காட்சியான நலம் கொழித்தது.

திருச்சி மலைக்கோட்டைத் தாயுமானவர் கோவில் கட்டளைத் தம்பிரான். தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்டவர்; ஆதீனத்தால் நியமிக்கப் பெற்றவர். ஆனால், ஆதீனத்திற்கு மாறுபட்டும் வேறுபட்டும் நடக்கத் தலைப்பட்டார். அவரைத் தட்டி ஒடுக்கி நிலைப்படுத்த வேண்டிய முயற்சியில் ஈடுபட்டார் தருமபுர ஆதினத் தலைவர். அப்பொறுப்பைப் பிள்ளை அவர் களிடம் ஒப்பித்தார். அதனால்தான் வேதநாயகரைக் காண்பதற்குப் பிள்ளை அவர்கள் சென்றார்கள்.

கட்டளைத் தம்பிரான் செய்யும் பொருந்தாச் செயல் களைப் பிள்ளை அவர்கள் வேதநாயகரிடம் எடுத்துரைத்தார். முறைப்படி அச் செய்தியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ஒரு விண்ணப்பமாகத் தர வேண்டினார். அவ்வாறே அப்பணியை இனிது முடித்துத் தந்தார் வேதநாயகர். செம்மையும் நேர்மையும் வாய்ந்த அவ் விண்ணப்பம் ஆதீனத்தார்க்கு வெற்றியைத் தேடித் தந்தது; பெரும் புலமையாளர் இருவரைச் சேர்த்து வைத்த பெருமையையும் அது தேடிக் கொண்டது.

பிள்ளை அவர்கள் நினைத்த உடனே எத்தகு சிறுதடையும் இல்லாமல் செய்யுள் இயற்றும் திறம் படைத்தவர். நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பாடல் பாடுதல் அவர்க்கு எளிய செயல்.