உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

79

இத்தகையவர் உள்ளத்தில் வேதநாயகர் அன்பும், புலமையும், தொண்டும் மின்னி மின்னி மிளிர்ந்தன. அவற்றைக் கொண்டு, வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவராக்கி 438 பாடல்கள் பாடினார்.குளத்தூர்க் கோவை என்பது அதன் பெயர். பெரியோர் தொடர்பு உலகுக்குப் பெருநலம் ஆக்கும் என்பதற்கு இச் செய்தி சான்றாம்.

வேதநாயகர் நீதி நூல் என்னும் அரிய நூல் ஒன்று இயற்றினார். பிள்ளை அவர்கள் அந் நூல் முழுவதையும் பார்த்துச் சிறப்புப் பாயிரம் பாடினார். முன்னிலும் இவர்கள் தொடர்பு முதிர்ந்தது. தம்முடன் சில நாட்களேனும் பிள்ளையவர்கள் தங்கி இருக்க வேண்டும் என்று வேதநாயகர் விரும்பினார்; தம் வேட்கையைப் பிள்ளை அவர்களுக்கு எழுதினார். பிள்ளை அவர்கள் வேதநாயகர் முன்சீப் பணிசெய்து கொண்டிருக்கும் சீர்காழிக்குச் சென்றார்.

பிள்ளை அவர்கள் சீர்காழிக்கு வந்தது ஊர்ப் பெருமக்கள் உள்ளத்தைக் குளிர்வித்தது. அவரைக் கொண்டு தம் ஊரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமான் மேல் ஒரு கோவை நூல் பாடுமாறு வேண்டினர். பிள்ளை அவர்களும் தம் விருப்புக்குரிய அப் பணியை ஏற்றுக் கொண்டு விரைந்து இயற்றினார்; நூல் அரங்கேற்றத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றன. கவியரங்கத் தலைமையை வேதநாயகர் ஏற்றார். தானும் தவறாமல் வந்து கவியரங்கம் முடியும் வரை இருந்து சிறப்பாக நடத்தினார். கவிச் சுவையிலே மிகமிக ஈடுபட்டார் வேதநாயகர். தம் கருத்துக்களை அவ்வப்போது கவியாகக் கூறினார். "இறைவனே, எத்துணையோ மாலைகள் நீர் அணிந்திருப்பீர்; ஆனால் இந்தக் காழிக்கோவைபோல் ஒரு மாலையை அணிந்த துண்டோ? உண்டாயின் நீதிபதியாகி எம்முன் உரையும்" என்னும் கருத்தமைய “காழிவைப்பின் நீதி அதிபதி நாம் என அறிவீர்; நம் முன்னம் சத்தியமா அறைகுவீரே" என்று பாடினார்.

வளரும் பிறை போன்றது மேலோர் நட்பு என்பர். அவ்வாறே வேதநாயகர், பிள்ளை அவர்கள் நட்பு வளர்ந்து முழுமதியாகத் திகழ்ந்தது. அந்நட்பால் நற்றமிழ்; இலக்கியம் மேலும் நலம் பெற்றது.