உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வேதநாயகரும் சுப்பிரமணிய தேசிகரும்

சைவ சமயத்தைப் பரப்புவதற்கெனச் சைவ ஆதீனங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் திருவாவடுதுறை ஆதீனமும் ஒன்று. அதன் முதல் தலைவர் நமச்சிவாய மூர்த்திகள் என்பவர்; 16-ஆம் பட்டத்திலே வந்தவர் சுப்பிரமணிய தேசிகர் அவர்க்கும் வேதநாயகர்க்கும் உண்டாய தொடர்பு பற்றிக் காண்போம்.

சுப்பிரமணிய தேசிகர் தமிழாய்ந்து தெளிந்த உயர்ந்த பரம்பரையில் வந்தவர். திருக்குற்றலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் வழியில் வந்தவர். தமிழ் வடமொழி ஆய இருமொழிப் புலமையும் பெற்றவர்; இசை வல்லவர்; மெய்ப்பொருள் தேர்ச்சியாளர். அவர் தமிழ்ப்புலமை தவறாத நடுவுநிலைமையும் உடைய வேதநாயகரைப் பற்றிக் கேள்விப் பட்டார். அவரைக் காண மிக விரும்பினார். “அன்பீனும் ஆர்வம் உடைமை; அது வீனும் நண் பென்னும் நாடாச் சிறப்பு" என்பதற்கு ஏற்ப உள்ளார்ந்த அன்பு. நண்பாக உருக்கொள்ள லாயிற்று.

வேதநாயகருடைன் முன்னரே தொடர்புடைய பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனப் புலவர். ஆகவே அவர் வழியாக, வேதநாயகர்க்கு அழைப்பு விடுத்தார் தேசிகர். வேலை மிகுதியால் உடனே புறப்பட்டு வர இயலாமையால் வேதநாயகர் கவிதைக் கடிதம் ஒன்று விடுத்தார். அதில், திருவாவடு துறையில் வாழும் தேசிகர் பெருமானே! தாங்கள் எப்பொழுதும் இடையறாமல் என் உள்ளத்தே தங்கி இருக்கிறீர்கள்; என்னைப் பிரிய மாட்டீர்கள் என்பது என் துணிவு; ஆனால் பிள்ளை அவர்கள் தாங்கள் திருவாவடு துறையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களோ பெரும் புலவர்; பொய் சொல்லவும் கற்றுக் கொண்டார்கள் போலும்" என்னும் கருத்துடன் அமைந் திருந்தது அப் பாட்டு.

வேதநாயகர் விடுத்த பாடலைக் கண்டு மகிழ்ந்தார் தேசிகர்; தாமே மாயூரம் வர இருப்பதாகவும் துறவியாகிய தாம் இல்லறத்தார் மனைக்கு வருதல் கூடாது என்பதால் தம்மைத் தாம் தங்கியிருக்கும் மடத்திற்கு வந்து காணுமாறும் வேண்டினார். அதனை அறிந்த வேதநாயகர் "புலவர்தம் பொய் சொன்னார்;