உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

81

தேசிகராகிய தாங்கள் சொல்வதோ விந்தையாக இருக்கிறது. என் மனையில் எங்கு நோக்கினும் அங்கெல்லாம் தாங்கள் இருக்கிறீர்கள்; அவ்வாறாகப் பிறர்மனை புகாத பெருந்துறவு பூண்டது என்பது பொய்தானே" என ஒரு பாடல் பாடி விடுத்தார்.

தேசிகர் மாயூரத்திற்குச் சென்றார். பிள்ளை அவர்கள் வழியாக வேதநாயகர்க்குச் செய்தி அனுப்பினார். அன்று அமாவாசையும் கிரகணமும் கூடிய நாள். ஆதலால், "நெஞ்சமே! அமாவாசையுடன் கிரகணமும் சேர்ந்ததால் இருள் மிகுதி என அஞ்சவேண்டா. தேசிகர் ஆகிய அறிவுக் கதிர் இங்குத் தோன்றியுள்ளது. இனி இருள் நிற்குமோ?" என்று வேதநாயகர்

பாடினார்.

தேசிகரை நேரில் கண்டு "உவர்க் கடலில் பிறந்து கடுவெயிலால் சுட்டெரித்து மாலையில் மறைகின்றது கதிர்; ஞானக் கடலில் தோன்றித் தன்மை செய்து, என்றும் மறையாச் சுடருடன் விளங்குகின்றார் தேசிகர்" என்று பாடினார். தேசிகர், "அல்லி நிலவை நோக்கும்; என் மனம் வேதநாயகரையே நோக்குகிறது" எனப் பதிற் கவி பாடினார்.

66

மீண்டும் ஒருகால் வேதநாயகரைப் பார்ப்பதற்குத் தேசிகர் விரும்பினார். தம் வண்டியை அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்தார்; தேசிகரைக் கண்ட வேதநாயகர் “பயிர் மழையை நாடும்; சேய் தாயை நாடும்; அவற்றைப்போல் யான் உம்மை நாடி வந்தேன்" எனப் பாடினார். நுனியில் இருந்து கரும்பைத் தின்பது போன்ற சுவையினது நம் நட்பு; வளர்பிறை போன்றது நம் நட்பு; என்று வியந்து போற்றினார் தேசிகர்.

தேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு வேதநாயகர் ஊர் திரும்பினார். திரும்பியதும் தேசிகருக்கு ஒரு கவி விடுத்தார். "தேசிகர் பெருமானே யான் ஊர் வந்து சேர்ந்தேன்; ஆனால் உளம் வந்து சேரவில்லை. அதனை அன்பு கூர்ந்து அனுப்பி உதவுக" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் வேதநாயகர்.

தேசிகர் சைவ சமய குரு; வேதநாயகர் கிறித்தவர். எனினும் சமயவேறுபாடு அவர்கள் அன்புக்கும் நண்புக்கும் இடையூறாக இருக்கவில்லை. தமிழ் இணைத்து வைத்தது. இ ணைக்கும் தமிழ் என்றும் வாழ்க!