உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மறைமலையடிகள்

நாகையில் (நாகப்பட்டினத்தில்) தோன்றியவர் அடிகளார். நாவும் கையும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சைவத்திற்கும் பயன்படத் தோன்றிய தவப்பெருமகனார் மறைமலையடிகளார்!

சொக்கலிங்கர், சின்னம்மை குடல் விளக்கப் பிறந்தவர், தமிழ்த்தாயின் குடல் விளக்கம் செய்யப் பிறந்த தமிழ்த் தோன்றலாகத் திகழ்ந்தார்.

தெய்வத் திருப்பெயராம் "வேதாசலத்"தையும், "மறைமலை' யாகக் கண்டும் கொண்டும் தமிழ் மண்ணுக்கு வழிகாட்டியாகவும் வழி கூட்டியாகவும் விளங்கிய ஒளிப் பிழம்பு அடிகளார்!

"உரையும் பாட்டும் உடையோர், விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தியும் பெறுவர்' என்பது பழந்தமிழ்ப் பாட்டனின் பாட்டு. சான்றோரால் பாடு புகழ் பெறும் மண்ணே மாணுறுமண் என்று பாராட்டப் பட்ட காலத்தில் கிளர்ந்த பாட்டு அது. அப் பாட்டுக்குத் தக எண்ணற்ற புகழ்மணி, உரையும் பாட்டும் கொண்டு திகழ்ந்தவர் அடிகளார். அவற்றை விரித்தல் நம் ஆய்வன்று; விடுத்தலோ தோய்வன்று.

உரைக்கு ஒருவர் பாட்டுக்கு ஒருவர். இருவரும் எவர்? தென்றலும் ஞாயிறும் ஆவர்.

தென்றல், தமிழ்த் தென்றல் திரு.வி.க.

ஞாயிறு, மொழி ஞாயிறு பாவாணர்.

முன்னவர் உரை, வாழ்க்கைக் குறிப்பில் கண்டதும் மறைமலையடிகள் மாண்பில் கண்டதும்.

பின்னவர் பாட்டு, மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலரில் கொண்டது.