உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

107

மாசு நீக்கி மணியாக்கல் போலக், காணுதற்கரிய நுணுக்கங் களைக் கண்டுரைத்தல் 'ஆராய்ச்சி' என்பதன் பொருளதாதல் ச்சொல் வழியால் நாம் அறிந்து கொள்ளத் தக்கதாம்.

ஆய்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நம் முந்தையர் அறுதியிட்டுள்ளனர். ஆய்வுக்கு இன்றியமையாத் தலைமைப் பண்பு நடுவு நிலைமையாகும்.

முறை மன்றங்களில் முறைமைக்கு இலக்கணமாகக் கொள்ளப்பட்டுள்ள சமன்கோல், பழந்தமிழர் கொண்ட நடுவுநிலைச் சான்று என்பதைச்,

“சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி"

என்னும் வாய்மொழி வழியே நாம் அறியலாம். இன்னதொரு சான்று நுகக் கோல் நடுவாணியுமாம் என்பதை நா அறிவோம். அதனைக்,

"கொடுமேழி நசையழவர் நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்”

என்ற பட்டினப்பாலை பாடும் (205-7)

ஒன்றை விருப்போடு பார்த்தலும், ஒன்றை வெறுப்போடு பார்த்தலும் நடுவு நிலைப் பார்வை ஆகாது என்பதை,

“வாரம் பட்டுழித் தீ யவும் நல்லவாம்

தீ ரக் காய்ந்துழி நல்லவும் தீ யவாம்”

என்று சிந்தாமணி உரைக்கும் (888)

செவ்விதின் ஆயும் முறை இன்னது என்பதைக்

“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கள்

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்

உற்ற குண்ம் தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்'

என்று அறநெறிச் சாரம் அறிவுறுத்தும் (42)

முழுதுறு வாழ்வையும் பழுதறும் ஆய்வுக்கே பயன்படுத்திய அடிகளார், அவ்வாய்வுக்கு மூலப் பொருளை இளந்தைப் பருவ முதலே தேடிக் கொண்டதையும் அவர் நூலாய்ந்த முறையையும் மேலே காணலாம்.