உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

ஒன்பதாஞ் செய்யுட்கடோறும் திருமால் நான்முகன் என்பார்க் கெட்டாத நிலை கூறுவர்: பத்தாம் பாட்டுக்கடோறும் அமணரைப் பழிப்பர் என்று கூறுவது வைப்பு முறை கூறலாம்.

இன்னவையே யன்றிப் பிற வகையாலும் பகுத்து ஆராயும் வகையில் அவர்தம் நூல்பயில் குறிப்புகள் உள. காலமெல்லாம் கற்றுக் கொண்டே இருத்தல் ஆசிரியர்க்கும் ஆய்வாளர்க்கும் இன்றியமையாதது. இவ் வகையில் அடிகளார் தேடிக் கொண்ட அறிவுப் பரப்பு பெரிதாம். அவர்தம் நாட்குறிப்பில் காணப்பெறும் சில குறிப்புகள் அதற்குச் சான்றாவன:

7.1.1899 குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை இந்துத்தானி முன்சி வாயிலாக அறிந்து கொண்டேன்.

3.3.1900 இராமகிருட்டிணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன்.

30.8.1900 பேராசிரியர் மாக்சு மூலரின் Comparative Philology படித்தேன்.

25.3.1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன்.

22.12.1901 விவேகானந்தரின் பக்தியோகம் கர்மயோகம், ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன்.

5.5.1905 பாலகங்காதர திலகரின் வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன்.

27.11.1907 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்கு நம் தமிழ்ச் சைவர் கடப்பாடுடையர்.

6.8.1910 விவேகானந்தரின் கர்மயோகம் என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக் களைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன.

வை அடிகளார் தாம்பரம் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் வரைந்த குறிப்புகளுள் சில.

அடிகளார் பயின்ற நூல்களும் அவற்றைப் பயின்ற முறையும் பற்றி அவரே வரைந்த குறிப்புகளின் சிறு தொகுப்பு ஈதாம். ஆய்வியல் நெறிமுறை பற்றியும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டிக் காட்டியுள்ளதை அடுத்துக் காணலாம்.