உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம்

228 மேற்கொள்கிறார் அடிகளார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அம் மாட்டினைக் கொண்டே நூலாசிரியர் உளப்போக்கிற்கு மாறாக உரை கண்டார் என்பதை மேலே விரிவாக எடுத்துக் காட்டி விளக்குதலால், இவ்விளக்கம் இன்றியமையாதது ஆயிற்றாம். மாட்டு :

ஒரு பொருள் ஓரிடத்துச் சென்று ஒருவாற்றான் முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிறிதொரு பொருள் அவ்விடத்தினின்றும் தோன்றி நடந்து போய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்ஙனமே இடையில் வருவன எல்லாம் அமைய, கடைசிப் படியாக அப்பாட்டின் பொருள் முற்றுப் பெறுவதாகும்.

இவ்வாறு இடை இடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள், கடைசியாக அப்பாட்டின்கட் கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர் பெறுவனவாகும். இச்சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்து விளங்கும் பொருள் முதற்பொருள் எனப்படும்.

முடியணிவேந்தன் ஒருவன் அருமணி குயிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை, வீற்றிருப்ப, அவனைச் சார்ந்து நின்று, அவன்தன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கினாற்போல ஒரு பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்பு பொருள்களெல்லாம் அதனைச் சூழ்ந்து கொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்கா நிற்கும் என விளக்கும் அடிகளார், நச்சினார்க்கினியர் அதனைக் கொண்டுணர்ந்த வகையை வெளிப்படுத்துகிறார். மாட்டும் நச்சினார்க்கினியரும்

மாட்டு என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டு கட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும், பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து

ணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙன முறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையாலும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பால தன்றென மறுக்க என வரைகின்றார்.

விளக்க உரைக் குறிப்புப் பகுதியிலே இம்மாட்டு இலக்கண விளக்கம் முதல் 18 இடங்களில் அவரை அடிகளார் மறுத்து எழுதுகிறார்.