உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

மழைநீர் நிலத்தில் சேர்வதன் முன்னே அதனைத் துப்புரவான வெள்ளைத் துணிகட்டிப் பிடித்துப் பெரிய மண்சாடியில் நிரப்பி வைத்துக்கொண்டு அதனுள்ளே தூசி செல்லாமல் அழுத்தமாக மூடி, அச்சாடியின் கீழே அமைந்த சிறிய நீர்த்தூம்பின் வழியாக அந்நீரை வருவித்துப் புழங்கி வரல் வேண்டும் என மழை நீரைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கூறுகிறார் அடிகளார்.

நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாததாய் உள்ள இரத்தம் அவ்வளவும் நீரேயாகும். இவ்விரத்தத்தை உண்டாக் குவது மட்டுமன்று இதனைத் தூய்மைப்படுத்துவதும் நீரேயாகும்” என நீரின் சிறப்பைத் திரட்டி உரைக்கிறார் அடிகள்.

உடலுழைப்பு மிகுதியாய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரும் மூளையுழைப்பு மிகுதியாய்ச் செய்பவர்கள் வெந்நீரும் பருகுதல் வேண்டும் என்பதை விளக்குகிறார்.

ஒரு முறையில் அரைக்கிண்ணத்திற்கு மேல் நீர்பருகுதல் ஆகாது என்றும், அந்நீரையும் சிறிது சிறிதாக உறிஞ்சி வாய் நீரோடு கலந்து சுவை பார்த்துக் குடித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றென்று கூறுதல் உலக இயற்கையில் நிகழும் மாறுதல்களை அறியாமற் சொல்லுவதாகலின் ஏற்கத் தக்கதன்று என்கிறார்.

ஓடும் நீரில் மின்கலப்பு உண்டு ஆதலால் அந்நீரில் குளித்தலே நலமாம். கட்டுக்கிடை நீரில் குளித்தல் ஆகாது என்கிறார்.

உணவு : உணவு, பற்றி விரிவான ஆய்வு செய்யும் அடிகளார், அறிவியலார் பகுத்த வகையில் முதலுணா, கொழுப்புணா இனிப்புணா, உப்புணா, நீருணா எனக் கூறுகிறார். இவை Protein, Fato, Corbo, - hydrates. salts. water என்பவற்றுக்கு அடிகளார் கொண்ட மொழியாக்கங்களாகும். அவ்வாறே Chlorids, Phosphate of lime, Vitamins என்பவற்றைப் பசுமஞ்சள், எரிகந்தச் சுண்ணம், உய்வனவு அல்லது உய்வுறை என மொழியாக்கம் செய்கின்றார்.

இவ்வகையால் அடிகளார் மொழியாக்கமாகச் செய்துள்ள அறிவியற் கலைச் சொற்கள் மிகப் பலவாம். மறைமலை அடிகளார் தொகுத்த வடசொல் தமிழகராதி, அறிவியற்கலைச்