உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைச் சூழல் :

1. குயிலிசை

அழகிய சிறிய மாளிகை; அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா; புல்வெளி, பூஞ்செடி, பழமரம், நிழல் மரம்; ஊடே செல்லும் நடைவழி; இத்தகைய மனங்கவர் சூழல்!

பதின்மூன்று அகவையுடைய ஓர் இளங்குயில்; அக்குயிலைத் தமிழ் செய்த தவத்தால் தந்த தந்தையார்! இருவரும் புல்வெளியின் ஊடேயமைந்த நடைபாதையில் உலாவிக்கொண்டே நூல் ஓதுகின்றனர்; உரையாடுகின்றனர்; டை இடையே இசைக்கின்றனர்.

இன்னிசை :

தந்தையார் இசையில் இளங்குயில் தோய்கின்றது. தந்தையின் குரலிசை தேனில் தோய்த்தெடுத்த பலாச் சுளைபோல் இனியது அதனையும் வெல்ல வல்லது இளங்குயிலின் குரலிசை; 'யாழும் குழலும் குயிலும் திறை' செலுத்துமாம்!

"பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்" என்பது வள்ளுவம்; பண்ணிசையுடன் பாடற்பொருளும் உணர்ந்து ஓதினால் அன்றோ உள்ளம் தளிர்க்கும்! உயிரும் தளிர்க்கும்! அவ்வாறு தளிர்க்கப் பாடவல்ல தந்தையும் மகளும் அவர்கள்.

தந்தையார் வள்ளலார் பாடிய பாடலொன்றை மெல்லென இசைக்கிறார்! அம் மெல்லியல் குயிலும் மெல்லிதழ் அசைய மிழற்றுகின்றது. அப்பாடல்:

“பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே."

என்பது.