உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

191

கட்டழகியாய் இருந்தால் என்ன! இறுமாப்பே குடிகொண்ட தன் சிறுமாக் குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும் பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வண்ணானை வருவிப்பானும் அறிவை ஓட்டிவிட்ட வெறுமூளையுடையானும், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு, ஊனும் கள்ளும் படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின் அவள் தன் சாதியை விட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின் அக்கல்லாக் கயவனையே கணவனாகக் கொள்ளல் வேண்டும்.

ஆ! பொருளற்ற இச் சாதி வேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையிலும் பெரிதோ! அன்றி ஞாலத்திலும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது என்கிறார் (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (21-23)

"எல்லா மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லா வற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி உலகிற் சீரும் சிறப்பும் எய்திவருதலைக் கண்கூடாகக் கண்டு வைத்தும் நம் தெய்வ ஆசிரியர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முடித்துக் கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவும் சாதியிறுமாப்புப் பேச்சைப் பேசிக் கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிற நாட்டவராற் பெரிதும் இழித்துரைக்கப்படுகின்றதன்றோ' என்று பிற சமயங்களோடு ஒப்பிட்டு உரைக்கிறார் (மேற்படி 32)

"ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய் வந்தால் அதனை நீக்கலுறுவோன் அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவன் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்து போம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங்களையும் நன்கு ஆய்ந்து கண்டு பின்னரவ் வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாத செயற்பாலதாகும். (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், 77)