உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 228

"அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப் புதுமுறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அகமகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது" என்பது அது. அடிகளார் ஆய்வின் ஆழத்திற்கு ஒரு சான்று:

"இப் பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். அவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் நேமி கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வட சொற்கள், யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றே யாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக, ஏனைய வெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்." இது முல்லைப்பாட்டின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.56)

இப் பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத் தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை அமரர், கங்கை, புண்ணியம்,சமம் என்பனவாம். ஞமலி என்னும் ஒருசொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும் ஆகவே, இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க" இது பட்டினப் பாலையின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.77).

மதுரைத் தமிழ்ச் சங்கம் :

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலாய் பழைய நூல்களைத் தமிழ் மரபில் ஆய்ந்து புத்துரை காணும் அடிகளார்