உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

பற்பல தொண்டுகள் :

று

அடிகளார் சென்னைப் பகுதியிலும், திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை முதலான இடங்களிலும் நடைபெற்ற சமய விழாக்களில் பங்குகொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் திருக்கோயில் வழிபாடு செய்தலில் பேரீடுபாடு காட்டினார். அடுத்துள்ள திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடாற்றினார். கல்லூரியின் விடுமுறைக் காலங்கள் எல்லாம் இவ்வாறு சமயப் பணியிலும் மொழிப் பணியிலும் அடிகளார் தொண்டு இயன்றது. தூத்துக்குடிக்குச் சென்றபோது வ.உ.சி.யின் விருந்தினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1908 இல் ஆங்கிலத்தில் ஓரிதழ் தொடங்கினார் அடிகள். அதன் பெயர் 'The Oriental mystic Myna' என்பது. அது அமெரிக்கா, பிரான்சு, ஆத்திரியா, செருமனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றது. உலகோர்க்குத் தமிழ் மொழி குறித்தும் சிவநெறி குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் அடிகளின் வேட்கையே இவ்விதழைத் தொடங்கச் செய்தது. திங்களிதழாகிய அது ஓராண்டுடன் அமைந்தது. இதன் பின்னரும் 1935 இல் 'The Ocean of Wisdom' என்னும் ஆங்கில வெளியீட்டையும் தொடங்கினார். அதனை 'முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர்' என்னும் நூலின் முன்னுரையில், 'செந்தமிழ் மொழியிலும் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலகம் எங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒருகால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலால்' எனக் குறிப்பிடுகிறார்.

பொதுநிலைக் கழகம் :

தமிழகத்தில் சாதி சமயப் பிணக்கற்ற 'பொதுநிலைக் கழகம்' ஒன்று உருவாக்கவேண்டும் என அடிகள் விரும்பினார். இயல்பாகவே வள்ளலார் கொள்கை வழியில் நின்ற வரும் வள்ளலார் பாடல்கள் அருட்பாக்களே என நிலை நாட்டியவருமாகிய அடிகளார் அவ் வள்ளலார் கண்ட ‘சமரச சன்மார்க்க சங்கம்' என்னும் சங்கத்தை 22-4-1911 ல் தோற்றுவித்தார். அச் சங்கமே பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பெயரைத் தாங்கிற்று. சன்மார்க்க சங்கம் தோற்றுவிக்க நேர்ந்த நிலையை அடிகள் 'ஞான சாகரத்'தில் குறிப்பிடுகிறார்.