உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

143

கொள்பவரெல்லாம், ஒப்பியன் மொழி நூல் மாணவராதற்கும் உரியவரல்லர் என்பது என் ஆய்ந்தமுடிபு.

செயற்கை வல்லொலி யெல்லாம் சிறந்து, பலுக்க (உச்சரிக்க) அரிதான சொல்லமைப்பெல்லாம் பெற்று, ஆசியா ஐரோப்பா ஆகிய இருபெருங் கண்டங்கட்குப் பொதுவான சொற்களை யெல்லாம் தழுவி, எண்ணரு நூற்றாண்டுகளாக இடுகுறி முறையில் வளம்படுத்தப் பட்ட வடமொழியை; இயல்பாய எழுத்து எளிய வொலி கொண்டு இளஞ்சிறாரும் ஒலிக்கும் சொல்லமைப்புப் பெற்று மாந்தன் தோன்றிய காலந்தொட்டு மாண்பாக வளர்க்கப் பெற்ற தமிழுக்கு முந்தியதாகவும் மூலமாகவும் காட்டத்துணிவார்; மொழி நூற்றுறைகளில்முற்றத் துறைபோய முதுபெரும் புலவராகத் தம்மைத் தாமே மதித்துத் தருக்கின் அவருக்கு விடையாக யானொன்றும் விடுத்தற்கில்லை" என்கிறார்.

இம்மறுப்புக் கட்டுரை முகப்பிலே, “என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை ஆயும் ஆற்றலுடையார் இந்து நிலையத்திலாவது அந்நிலையச் சார்பிலாவது இல்லை என்பதே என்கருத்து என்கிறார். முடிவில்,

என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில் சாத்திரியார் அவர்கள் குறிப்பிடாத இரண்டொரு குற்றங் குறைகள் உள. அவை சொற்பொருள் பற்றியவை. அவற்றை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வேன் என்றும் கூறுகிறார்.

திருவாவடுதுறை மடம்

66

செந்.செல். 25: 457-64

'ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், 'இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ' என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர்பாலும், சோறு என்னும் தூய தமிழ்ச் சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரையடித்த குட்டித் தம்பிரானைப் பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சி யாலும் திருவாவடு துறை மடம் சிறப்புற்றதே. ஆயினும் தமிழைப்போதிய அளவு போற்றாதது வருந்தத் தக்கதே.'

- தமிழர்மதம். 130