உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திருப்பனந்தாள் மடத்தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில் ஒருமுறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்துவரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

ஆயினும், நான் கருதியது கைகூடுமா என்று ஓர் ஐயம் எனக்கிருந்தது.ஏனெனின், அங்கு இராயசம் என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரத் திருமுன்பு செல்லுமுன்பே என்னையழைத்து, தம் அகவைக்கும் அறிவுக்கும் பதவிக்கும் தகாத பலவினாக்கள் வினாவினார். நான் தங்கியிருந்தமடத்து விடுதி மேலாளரும் என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியாளரும் மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனிமனையையுங் கண்டேன். அவர்தம்பிரானுக்கு ஆசிரியரா யிருந்தவர் என்றுங் கேள்விப் பட்டேன்.

ஆதலால், வாய்த்தால் தமிழுக்கு வாய்க்காவிட்டால் வடமொழிக்கே என்று கருதிக்கொண்டு குரு பூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பிரான் அவர்களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். 'ஐயர் அவர்களைப் பற்றித் தெரியுமா?' என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள்; தெரியும் என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும் தமக்கு நினைவில்லை என்றார். அவ்வளவுதான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள்.நானும் விடுதிக்குத் திரும்பினேன்...

என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு. எங்கட்குப் பிற்பகல் 3 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது அப்பொழுதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவிக்கப்பட்டது.

எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ் நாடு; மடம் தமிழன்மடம்; மதம்தமிழன் மதம்; பணம் தமிழன்பணம்! அங்ஙனமிருந்தும்,