உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

165

அப்படியானால் நீர் வேறு உண்ணும் என்றேன். ஆகவே, தமிழன் இப்படித் தன்னைத் தாழ்த்தி வைத்திருக்கிறான். இஃது ஒன்றே போதும், தமிழ் தாழ்த்தப்பட்டது. தமிழர் தாழ்த்தப்பட்டனர் என்பதற்கு" என்றார்.

அங்காடி

தென்மொழி 1: 10

ஒரு நாள் சென்னை நகரப்பேருந்தில் பாவாணருடன் வந்தேன்; உட்கார இடமில்லாமையால் நிற்க நேர்ந்தது. வண்டி யோட்டத்தில் மிகுந்த குலுக்கல் உண்டாகியது. பாவாணர் நகைத்துக்கொண்டே, "அங்கம் ஆடுகின்ற இடம்தான் அங்காடி என மலையாள அகர முதலி கூறகின்றது. பேருந்தையும் அங்காடி என்று கூறலாம். ஏனெனில், இங்கேதான் நன்றாக ஆடுகின்றது" எனப்பெருநகை செய்தார். வண்டியின் இயல்பான ஆட்டத்தொடு பாவாணர் தாமே தம் உடலை அசைத்துக் காட்டியமை "எத்தகைய குழந்தை இவர்” என எண்ணத் தோன்றியது.

தனிப்பால்

ஒரு சமயம் பாவாணரிடம், "தமிழில், தனித் தமிழ் என ஒன்று உண்டா?” என்று ஒருவர் வினாவினார். உடனே பாவாணர், "பால் கிடைக்கும் என்று எழுதாமல் தனிப்பால் கிடைக்கும் என்று எழுதும் நிலை ஏன் ஏற்பட்டது? கலப்படப் பால் உண்டாகிய மையால், கலப்பில்லாமை காட்டத் 'தனி' என்பது சேர்க்கப்பட்டது போல், தமிழுக்கும் ஏற்பட்டது" என்றார்.

மரத்தல்

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததே' என்கிறீர்கள்; 'இடுகுறிப்பெயர்' என்று நன்னூலார் கூறுகிறார். 'மரம்' என்பது இடுகுறிப்பெயர் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. “அதற்கும் காரணம் உண்டா?" எனப் பெரும்புலவர் பா. நாராயணர், பாவாணரை வினாவினார். அவர் உடனே, "நாம் நெடுநேரம் உட்கார்ந்திருக்கிறோம்! எழும்புகிறோம்; மதமதப்பு உண்டாகின்றது! என்ன சொல்கிறோம்? மரத்துப்போய் விட்டது என்கிறோம்! ஆம் மரத்தைப் போல் உணர்வு குன்றிய நிலைக்குப் போய்விட்டது என்பது தானே மரத்துப்போதல் என்பதன் பொருள். உணர்வு நிலையில் மிகக்குறைந்தது என்பதனாலேயே மரம் எனப்பட்டது என்பது விளங்குகின்றது அல்லவா" என்றார்.