உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

173

சுட்டும் சான்றையும் காட்டியுள்ளேன். மேலே தங்கள் குறிப்பின் வண்ணம் கடனாற்றுவேன் என எழுதினேன். மறுநாளே "நுங்கள் கருத்து மிக நன்றே; அவ்வாறே தொடர்ந்து செய்க" என எழுதினார்! எவ்வளவு பேருள்ளம் பாவாணர்க்கு! என்ன பேறு அவரொடு பணி செய்வதற்கு வாய்த்தது என மெய்யாகவே உவந்தேன்.அதனினும் பாவாணரைப் பனிமலையென மதிக்கவும் வாய்ப்புக் கிட்டிற்று.

பனிமலைக் கொடுமுடி

யான் அகர முதலித் துறையில் அமர்த்தமாகும் முன்பு பாவாணரும் மதிவாணரும் தொகுத்துச் சொற்பிறப்புக்காட்டி 100 பக்கங்கள் தட்டச்சிட்டுத் தலைமைச் செயலகத்திற்குப் பார்வைக் கோப்பாக விடுத்திருந்தனர். அதன் ஒரு படியை என்னிடம் தந்து, "இத்தொகுப்பில் இணைக்க வேண்டும் சொற்கள் உளவாயின் அவற்றைத் தனியே குறித்து விடுக்க" என்றார் பாவாணர்.

அந்நூறு பக்கத் தட்டச்சுப் படிவங்களில் இன இடையே சேர்க்குமாறு 23 பக்க அளவில் சொற்கள் விளக்கங்களுடன் அமைந்தன. முன்னே நூறு பக்கங்கள் தலைமைச் செயலகத் திற்கு விடுக்கப்பட்டமையாலும் அவற்றின் இடைச் சேர்ப்பு இஃது ஆகலானும், அவ்விரு பத்து மூன்று பக்க, இணைப்புடன் 'இவ்விணைப்புச் சொற்கள் புலவர் இளங் குமரனார் அமர்த்தத்தின் பின் அவரால் தொகுக்கப்பட்டவை" என மேற்குறிப்பு எழுதினார் பாவாணர். துறையில் இருப்பார் எவர் செய்யினும் தம் செயலே என்னும் தனிப் பெருமுறையே நிலைப்பட்டுவிட்ட நாட்டிலே பாவாணர் செயலை நோக்க அவர் பனிமலைக்கொடு முடியினும் உயர்கிறார் அல்லரோ!

2. நெருங்கலும் நிகழ்தலும்

பாவாணர் வகுப்பு

"நான் படித்த சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் தமிழாசிரியராக இருந்து தனித்தமிழில் இனிக்க இனிக்கப்பேசி, மாணவர்களைச் சிரிக்க வைத்துத் தமிழ் மீது ஆழ்ந்த பற்றுக்கொள்ளச் செய்தவர்; தமிழ் நெறிக்கு எவர் தவறு செய்தாலும் -அவர் எவ்வளவு