உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

221

தமிழே முதன்மொழி தமிழரே முதன் மாந்தர் என்னும் கொள்கைகளை நிலைநாட்டியவர். அப்பழுக்கில்லா வாழ்வுக்கு உரியவர். சொன்னதைச் செயற்படுத்தும் திறனாளர். எக்கருத்தையும் எவ்விடத்தும் யாரிடத்தும் சொல்லத் தயங்காத்துணிவாளர்! இப்பெற்றியராம் ஞா. தேவநேயன் எனும் பெயர் பெற்ற செந்தமிழ் ஞாயிறு பாவாணர் பெயரே சாலப் பொருந்துவதாய் ஆய்ந்தெண்ணிப் பெயர் சூட்டப்பட்டது.

தி.பி. 2001 கடகம் 17 (2 -8-1970) இல் நெய்வேலியில் 8 குடும்பங்களை உறுப்பாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. இக்கால்,அதன் இரட்டி எண்ணிக்கைக் குடும்பங்களோடு தொய்வின்றித் தன் பணியைத் தொடர்கின்றது.

சில குறிப்புகள் :

தமிழ்ப்பெயர் தாங்கும் துணைவனும் துணைவியும் இணைந்தே பா.த.கு வில் உறுப்பாக முடியும். எக் கூட்டத்திற்கும் எவ்விழாவுக்கும் இருவரும் வர வேண்டும். அவர்தம் மக்களும் சார்பாளரும் எந்நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளலாம்.

உறுப்பினர்களுக்குத் தேவைப்படும்போது நலிவைப் போக்கும் பொருளுதவியைக் குடும்பம் செய்கிறது. ஓராண்டிற்குத் தேவையான பருவப் பொருட்களை வாங்கி வழங்குகிறது. பொங்கலுக்குத் தேவையான துணிவகைகளை வாங்கியளிக்கிறது.

உறுப்பினருடன் நெய்வேலி வாழ் மக்களும் பயன் பெறப் பொங்கல்விழா, திருவள்ளுவர் திருநாள், பாவாணர் பிறந்தநாள் விழா, மறைமலையடிகள் விழா, பாவேந்தர் பெரியார் அண்ணா பிறந்த நாள் விழா, விளக்கணி வேரறுப்பு விழா போன்ற விழாக்களை நடத்திவருகிறது. வெளியூர்களுக்குச் சுற்றுச் செலவு செல்லவும் செல்லுங்கால் அங்குள்ள தமிழ் அறிஞர்களைக் கண்டு அளவளாவவும் அதே போன்று நெய்வேலி வருகை தரும் தமிழறிஞர்கட்கு விருந்தளித்து வரவேற்றுக் கலந்துரையாடவும் செய்கின்றது.

தமிழர் அறக்கட்டளை ஒன்று (10-4-76) நிறுவியுள்ளது. திருக்குறள் வகுப்பு, தனித்தமிழ்ப் பயிற்சி வகுப்பு, அறிஞர்களின் நூல்களை விற்று உதவுதல், அறிக்கை வெளியீடு இவற்றின் வழியே அரசையும் பிறரையும் நற்செயலுக்குத் தூண்டுதல் இன்ன வெல்லாம் குடும்பம் தன் கடனாகக் கொண்டுள்ளது.