உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

எங்கும் உள்ளர். அவ்வப் போது தம்தம் திறத்திற்கும் வாய்ப்புக்கும் தக்க வெளியீடுகளும் செய்து வருகின்றனர்.

எத்துணைப் பேர்கள் பாவாணர் வழியில் தம் பெயர்களைத் தனித் தமிழாக்கிக் கொண்டுளர்! எத்துணைப் பேர்கள் பாவாணராலேயே பெயராக்கம் பெற்றுளர்! அவர்களுள் எத்துணை எத்துணைப் பேர்கள் தம் கொள்கை ஊற்றத்தால் தமிழ்த் தொண்டு செய்து வருகின்றனர்! இவர்களெல்லாரும் உயிரோடு உலாவரும் நினைவு நிறுவனங்களும் நிலைபெற்றச் சின்னங்களும் அல்லரோ! இவர்களிடத் தெல்லாம் பாவாணர் இரண்டறக் கலந்து நிற்கின்றார் அல்லரோ! இனிச் சொல் வழியால் வாழ்வாங்கு வாழும் தேவநேயரைக் காண்போம்: சொல்லும் சீர்த்த சின்னந்தானே!

தேநேயர் படைப்பாக்கங்களை யெல்லாம் ஒருங்கு திரட்டி, அகரநிரலில் ஓரடைவு செய்தால் அது தேவநேயமாகத் திகழும்.

ஆசிரியர் தொல்காப்பியனார், தொல்காப்பியத்தால் நம்முடன் ஒன்றி உறைந்து உடனாகித் திகழுமாப் போலத் தேவநேயத்தால் தேவநேயரும் நம்மொடும் ஒன்றி உறைந்து உடனாகித் திகழ்வார்.

தேவநேயரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி அவராலேயே முற்றுற முடிக்கப் பெற்றிருப்பின் மற்றொன்று வேண்டா என்னும் நிலையில் அஃதொன்றே தேவநேயமாகத் திகழ்ந்திருக்கும். அதனைப் பெறும் பேறு தமிழ் மண்ணுக்கு வாயாமையால் கிடைத்த - கிடைக்கின்ற அளவிலேனும் தேவ நேயத்தை உருவாக்கி வருதல் வேண்டும். அதனை உருவாக்குதல் எவ்வண்ணம்?

தேவநேயர் படைப்பெல்லாம் சொல்லாய்வாகவே வெளிப்பட்டவை. அவர், எப்பொருளை எடுத்துக் கொண்டு பேசினாலும் எழுதினாலும் அவர்க்கு முந்துற நிற்பது சொல்லாய்வே! சொல்லாய்வு ஊடாடாத உரையாட்டும் கூட அவர்மாட்டு அமைந்தது இல்லை. ஆகலின் அவர்தம் படைப்பு களில் - பரிந்தெழுதிய அஞ்சல்களில் - அறிக்கைகளில் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகள் அனைத்தையும் அகர நிரலில் தொகுக்க வேண்டும்.