உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நோய்க்கு ஏற்ற மருந்து

நோயின் கடுமைக்குத் தக்கவாறு மருந்தின்கடுமையும் இருக்கும். மருந்தின் கடுமை நோக்கி அதை விலக்குபவன் நோயை வளர்த்து மாய்பவனேயாவன். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகள் கட்டத்தை விளைப்பினும் பின்னர்க் காலமெல்லாம் மக்கள் இன்புற்று வாழ வழி கோலுவது தேற்றம். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் அடுத்த தலைமுறையில் மக்கள் மாற்றொணாத் துன்புற நேரும், களவும் கொள்ளையும் கொலையும் கட்டிற் கடங்கா: பகையும் பசியும் பிணியும் மட்டிற்கு மிஞ்சும்; காவலருங் கள்வராவர்; அரசும் ஆற்றலறும்; நாடுங்காடாகும். அத்தகைய நிலைமை நேராவாறு எதிர்காலமக்கள் மீது இரக்கங் கொண்டேனும் க்காலமக்கள் பண்பாடு மேற் கொள்ள வேண்டும். ம.வி.69.

பகுத்தறிவாளர் வழிகாட்டல்

பகுத்தறி வியக்கம் தமிழரெல்லார்க்கும் பொதுவாயினும் பெரியாரைப் பின்பற்றியர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் தாமே முன்பு பகுத்தறி வொழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். த.இ.வ.319.

பண்பாடு

பண்படுவது பண்பாடு. பண்படுதல் சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப் பட்ட நிலமென்றும் திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும் திருந்திய வுள்ளத்தைப் பண்பட்ட வுள்ளமென்றும் சொல்வது வழக்கம். ப.த.நா.ப. 6

பயிற்றுமொழி

துவக்கக் கல்வி முடிந்தபின் பாதிப்பேர் தொழிற் பயிற்சி பெறலாம். மீதிப்பேர்நடுத்திறப் பள்ளிகளில் சேரலாம். நடுத்திறப் பள்ளிக் கல்வியில் இருந்து பல வகைப்பட்ட கல்லூரிக்கல்வி வரையும் இருமொழிவாயிற் கல்வி இருக்கலாம். மேற்கல்வி கல்லாதவர், வெளிநாடு செல்லாதவர், ஆங்கிலங் கற்கும் ஆற்றல் இல்லாதவர் ஆகிய மூவகையாரும் தமிழ்வாயிற் கல்வியையும் ஏனையோரெல்லாம் ஆங்கில வாயிற் கல்வியையும் மேற் கொள்ளலாம். இங்குத் தமிழ் என்றது தமிழ்நாட்டை நோக்கி.

ம.வி.89.