உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பிறவி நோக்கு

பிறவிக்கு நோக்கு உண்டு; அதிலும் மாந்தர் பிறவிக்குத் தனிச்சிறப்பான நோக்குண்டு 'பிறவிக்கு நோக்குண்டு' என்று அறிவார் அரியர்; அறியினும், தம் பிறவிநோக்கைப் பிறர்க்கு உரைப்பார் அவரினும் அரியர்; அவருள்ளும், அப்பிறவி நோக்கை நிறைவேற்றுவார் அரியருள் அரியர் ; அத்தகைய அரியருள் அரியர் பாவாணர்.

பாவாணர் பிறவி நோக்கை நாம்காண்பது எப்படி? நோக்கை அறிந்தன்றோ பாவாணர் நோக்கை அறிய வேண்டும்! செய்யுள் உறுப்புகளுள் ஒன்று நோக்கு என்பது. முழுதுற நோக்கி முடிவெடுப்பதே அது. அதனை,

“மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே"

என்பார் தொல்காப்பியர்!

அறிவார்ந்த சான்றோர் படைப்பாம் 'பா'வுக்கு நோக்கு உண்டெனின், அவ்வறிவார்ந்த சான்றோர் பிறவிக்கு நோக்கு இல்லாமல் ஒழியுமோ? அவரிடத்திருந்த - அமைந்து கிடந்த நோக்குத் தானே பாவின் கண் படிந்தது! பாவின் நோக்கு, 'பாவாணர்' நோக்காதல் இயற்கையே யன்றோ! பாவாணர்க் கெல்லாம் பொதுமையாம் நோக்கு, மொழிஞாயிறாம் பாவாணரிடத்து மல்கியமை வியப்பாகுமா?

தம் பிறவிக்கு நோக்கு உண்டு என்பதை எத்துணைப் பேர் அறிந்தனர்? அறிந்து கடனாற்றினர்?

"வெந்ததைத் தின்று விதிவந்தால் போதல்" என்பார் நோக்கு எவ்வளவு சுருங்கி விட்டது! அவ்வாறு சுருங்குவதா நோக்கு? விரிய விரிய விரியும் 'சங்கப் பலகை' யன்றோ நோக்கு! அறிதோறும் அறியாமை கண்டு, விரிதோறும் விரிவு விஞ்சிப் பெருகுவதன்றோ நோக்கு. எழுகதிர் ஞாயிறென விரிவுறும் நோக்கு, சுரிபுழுவாய் சுருட்டையாய் - அமைந்து கெடுமோ?

-