உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

23

"ஒவ்வொரு கலைக்கும் அறிவியற்கும் தெரிவியல (Theory) புரிவியல் (Practice) என இருகூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும்போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று. அதற்குக் காலமும் இடந்தராது.

"நீர்மின்னோ, அனல்மின்னோ உருவாக்கப்படுவது எங்ஙனம் என்றறிவது தெரிவியல்; மின்வலியால் விளக்கெரியச் செய்வதும் விசிறியாட வைப்பதும் புரிவியல். மின் விளக்கைக் காணும் பொதுமக்கள் மின்னாக்க முறை அதனால் அறிவிக்கப் படாமையால் அது அறிவியலின்பாற்பட்டதன்று என்று பழித்துப் புறக்கணியார்”- இக்குறிப்புகளைப் பாவாணரே வழங்குகின்றார்.

தாம் எழுதிவரும் வேர்ச்சொற் கட்டுரைகள் சொற்களின் திரிபையே காட்டிக்கொண்டு செல்கின்றன என்றும், அவற்றை யாளும் நெறிமுறைகளை எடுத்துக் கூறவில்லை என்றும், அதனால் அறிவியலின் பாற்பட்டன அல்ல என்றும், சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்யாத பலர் மறைமுகமாகக் குறை கூறுவதாகத் தெரிந்து அவர்க்கு மறுப்பு விளக்கமாக இவ்வறிவியல் கூறுகளைக் குறிக்கின்றார் பாவாணர்.

அணுவின் ஆற்றலைக் கண்ட ஐன்சுடீனாரோ, புவியீர்ப்பைக் கண்ட ஐசக்கு நியூட்டனாரோ பொறிகளையும் கண்டு பிடிக்க வேண்டுமென மன அறிவியல் உலகம் எதிர்பார்த்திருந்ததில்லை! அவற்றைக் கொண்டு பிறர் பிறர் வேண்டும் பெற்றிகளைக் கண்டு உலகுக்கு அளித்தனர். அவ்வாறே பாவாணரும் தமிழ்மொழி தமிழின மீட்புக்கு வேண்டும் அடிப்படைக் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக நிலைப்படுத்திய அளவே அவர்தம் பணியின் வெற்றியாகும். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் ஆட்சியாளர் வயத்தது. அந்நிலை உருவாகும் வரை தனிமாந்தரோ, தனித்தனி அமைப்புகளோ எத்துணை முயன்றாலும் குளும் படியில் தங்கிய நீராக அமையுமேயன்றிக் குளுநீராகவோ, கடற்பரப்பாகவோ ஆக வாய்ப்பு இல்லை. மொழிக் கொள்கைக்கு மட்டுமன்றி வேறு எவ்வழிக் கொள்கைகளுக்கும் இதுவே முடிவாம்.இதனைத் தெளிந்தே, "தனித்தமிழ்ப் பற்றுடைய முற்றதிகாரி ஒருவர் ஆட்சியிலேதான் இவற்றை நிலைபெறுத்தக் கூடும்" என்கிறார் பாவாணர்! "தனித்தமிழ் மறவருள் ஒரு கடுங்கோல்முற்றதிகாரி தலைவனாக வந்தாலொழியத் தமிழ்த் தொண்டர் எத்துணையர் தோன்றினும் தமிழ் பேசும் நடை பிணங்கள் செவிக்கொளா; மனந்திருந்தா" என்றும், நொந்தும் வெந்தும் உரைக்கிறார். அந்நிலை எப்பொழுது வரும்?