உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

369

கையில் ஏந்தி அல்லது தலைமேற் கொண்டு மகிழ்ச்சியாற் கூத்தாடுதலே கொண்டாடுதல். சொ.ஆ.க.11

கோல்

கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும் கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். சொ. ஆ. க. 4.

கோவன் - கோன்-கோ

ஆயன் ஆக்களைக் காப்பது போல அரசன் மக்களைக் காத்தலால் அரசனுக்குக் கோவன் என்பது பெயர். கோவன் என்பது முறையே கோன் கோ எனத் திரியும். கோ-பசு. கோக்களை மேய்ப்பதுபற்றி ஆயனுக்குக் கோன், கோனார் என்னும் ஒருமைப் பெயரும் உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகட்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே.

சிலந்தி

உடம்பில் தலைக்குக்கீழ் எங்கேனும் புறப்படும் கொப்புளம் சிலந்திப் பூச்சியின் உடல்போல் திரண்டிருத்தலால் சிலந்தி எனப்பெயர் பெற்றது. ஒருவகைக் கட்டியை ஆங்கிலத்தில் Cancer என்றும் Canker என்றும் அழைப்பர். அது நண்டு போலிருத்தலின் இப்பெயர் பெற்றது. சொ. ஆ.க.9.

சீர் தூக்கல்

சீர்தூக்கல் என்பது, முதலாவது துலைக்கோலில் ஒன்றை நிறுத்தலுக்குப் பெயர். சீர், துலைத்தட்டு. தூக்கல், நிறுத்தல். இன்று மனத்தில் ஒன்றை நிறுத்தல் போல ஆராய்ந்து பார்த்தலுக்குச் சீர்தூக்கல் என்று பெயர். மனமாகிய துலைக்கோலில் மதிநுட்ப மாகிய வரை அல்லது படியிட்டு நடுநிலையாகிய நாவினால் நிறுப்பது போல ஆராய்தல், சீர்தூக்கல். சொ.ஆ.க.11.