உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செய்தார். அதனால், அச்சொக்கம்மாளை மரியாள் எனப்பெயர் சூட்டிக் கிறித்தவராக்கி மணவினை நடத்து வித்தார். ஆனால், அவ்வம்மையாரின் உறவினர் ஈழத்தில்இருந்தமையால் கூடிவாழ விருப்பமின்றிப் பிரிந்து ஈழஞ்சென்றுவிட்டார்.

தாம் செய்துவைத்த திருமணம் இத்தகு இடர்க்கு ஆளாகியமை அறிந்த தோக்கசு, கோயில் பட்டிக்கு அருகில் உள்ள பாண்டவர் மங்கலத்தில் ஓதுவாராக (உபதேசியாராக) இருந்த குருபாதம் என்பாரின் திருமகளார் பரிபூரணம் என்பாரை ஞானமுத்தருக்கு மீண்டும் மணமுடித்து வைத்தார்.

பரிபூரணம் பாளையங்கோட்டையில் உள்ள சேராடக்கர் கல்லூரியில் மூன்றாம் தரம் (III grade) படித்துத் தேறியவர். சமயப்பற்றில் ஆழ்ந்தவர்; குடும்பப் பாங்கில் சிறந்து விளங்கியவர்; கணவரொடு கருத்தொருமித்து வாழ்ந்தவர்; ஆசிரியப்பணி செய்தவர்.

ஞானமுத்தர் பரிபூரணத்தம்மையார் இல்வாழ்வில் மக்கள் பதின்பமர் பிறந்தனர். மகளிர் அறுவர்; ஆடவர் நால்வர்; அவருள் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும்பிறந்தவரே நம் தேவநேசன்!

தேவநேசன் (பாவாணர்) பிறப்பு கல்வி பணிபற்றிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்கள் விரிவாகவும், சுருக்கமாகவும் எண்ணிக்கையால் நான்கு கிடைக்கின்றன. அவற்றுள் மூன்று கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்களுக்கு எழுதியவை. ஒன்று, அகரமுதலிப்பணி தொடர்பாக அரசுக்கு விடுத்தது. அவற்றுள், பிறந்தகிழமை நேரம் முதலியவற்றோடு நாளும் பிறவும் தெளிவாக வரைந்துள்ளார்.

"தேவநேயன், தோக்கசு (Stokes) என்னும் துரை மகனாரால் எடுத்து வளர்க்கப்பெற்ற தோக்கசு ஞான முத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியராகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்கும் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் பக்கல் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு பத்தாம் பிள்ளையாகவும் நான்காம் மகனாகவும் பிறந்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நயினார் கோவிலிற் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்பது 1970 இல், "வாழும் புலவர்கள் வரலாற்றுக் குறிப்பு" களைக் கழகம் தொகுத்த போது, அதற்குப் பாவாணர் எழுதிய என் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் என்பதன் தலைப்பத்தியாகும்.