உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

27

தேவநேசன் பிறந்து ஐந்து அகவையராய் இருந்த போது 1906 இல் - அவர் தந்தையார் இயற்கை எய்தினார்; பின்னர், அன்னையாரும் இயற்கை எய்தினார்; பெரிய குடும்பம்; குடும்பத்தின் கடைக்குட்டி தேவநேசன்; ஆதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் இருக்கத் தக்கவராக இருந்தார்.

வடார்க்காடு மாவட்டம் ஆம்பூரில் தேவநேசனின் மூத்த அக்கையார் இருந்தார். அவர் தேவநேசனைத் தம்மொடு வைத்துக்கொண்டு பேணினார். ஆங்கிருக்கும் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார். ஆம்பூரில் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தேர்ச்சியுற்ற தேவநேசன் மேற்கல்வியை விரும்பினார். ஆங்கு அவ்வாய்ப்பு இன்மையால், தாம் பிறந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் பயில விரும்பினார். தம்பியார் கல்விக்கு உதவும் மனம் இருந்தாலும், அக்கையார் குடும்பப் பொருள்நிலை இடந்தருமாறு இல்லை. அவ்விடரைத் தீர்க்கத் திருவருளால் வாய்த்தார் 'யங்' (young) என்னும் பெருமகனார் ;

துரைமகனார்!

'யங்' என்பார் முகவை மாவட்டத்துச் சோழ புரத்தையடுத்த முறம்பு என்னும் சீயோன் மலையில் (திருவில்லிபுத்தூர் - சங்கரன் கோயில் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ நடுவு நிறுத்த நிலையமாக உள்ளது முறம்பு.) விடையூழியராக இருந்தவர். ஆங்கோர் உயர்தரப்பள்ளியை உருவாக்கித் தாளாளராகவும் இருந்தவர். திக்கற்றோர்க்கு இலவச உண்டுறை விடுதியும், வாய்ப்புடை யவர்க்கு எளிய கட்டணத்தொடு கூடிய உண்டுறை விடுதியும் நடத்தியவர். அவர் தேவநேசன் கல்வித்தேவையை உணர்ந்து கடனுதவி புரிந்தார்.

தேவநேசன், பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழியக் கழக (C.M.S.) உயர்நிலைப்பள்ளியில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளை (அந்நாளில் 4, 5, 6 ஆம் படிவங்களை)ப் பயின்று நற்றேர்ச்சி பெற்றார், பயிலும்காலத்திலே அவர் காட்டிய தேர்ச்சியும் எடுத்துக் கொண்ட கல்வித் துறைகளும் ஏற்றுக் கொண்டகடைப்பிடிகளும் அவராலேயே எழுதப்பட்டுள்ளன:

"4 ஆம் படிவத்தில் பூதநூல் உடல்நூல் நிலைத்திணை நூல் (Botany) தொகுதியையும், 5-ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சு, கணக்கு வைப்பு (Book-Keeping) த் தொகுதியையும், 6 ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த் தொகுதியையும் சிறப்புப்