உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அவர் காலத்தில், அவர் உறவாக இருந்தவர்; அவரைப் போலவே கிறித்தவ சமயம் புகுந்தவர்; அலுவலக எழுத்தராகப் புகுந்து துறைத்தேர்வுகள் முடித்துப் படிப்படியே மாவட்ட ஆட்சியாளராக அமர்ந்து ஓய்வு பெற்றமை கண்கூடு.

பாவாணர் உயர்வகுப்பில் எடுத்துப் படித்த பாடங்களைப் படித்து வங்கிப் பணியில் புகுந்து மாநில வங்கி மேலாண்மைப் பொறுப்பில் கைந்நிறையப் பணவாய்ப்பும் வளமனையும் “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்” பெற்றுத்திகழ்ந்தார் உளர்!

பாவாணரைப் போலவோ அதனினும் குறைந்தோ அடிப்படைப்படிப்புப் படித்துப், பாவாணர்போலவே மேனிலைப் பட்டங்கள் பெற்றவர், துறைத் தலைமை, கல்லூரித் தலைமை, பல்கலைக் கழகத் துணை வேந்தராம் நிலைகளில் அமர்ந்து சிறந்தமையும் பல்வேறு அரசியல் ஆட்சிக் குழுக்களிலும் பல்கலைக் கழகக் குழுக்களிலும் சிறந்து விளங்கியமையும் தெளிவு! ஆனால் பாவாணர்க்கு ஏன் இவையெல்லாம் எட்டாதவையாயின! எதிரிடைகள் போலவும் ஆயின! ஒப்ப நின்றாரும் ஒப்ப நில்லாரும் பதவியாலும் வாய்ப்பாலும் உயர்ந்து நின்று பாவாணரைப் புறக்கணிக்கவும் -பதவி பறிக்கவும் பள்ளந்தோண்டித் தள்ளவும், பாவாணரே சொல்வதுபோல் 'ஆண்டி எப்பொழுது சாவான் மடம் எப்பொழுது ஒழியும்' என்று பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட்காத்திருக்கவும் நேர்வானேன்?

6

'பிழைக்கத் தெரியாதவர்' என்று தள்ளிவிடுவதா? இயலா தவர் என்று ஒதுக்கி விடுவதா? ' முரடர்' என்றோ வெறியர் என்றோ ஒட்ட ஒழுக அறியார் என்றோ விலக்கி விடுவதா?

பிழைக்கத் தெரியாதவர் தாம்! பிழைக்க என்பதற்குப் 'பிழை செய்ய' என்பதே பொருள்! அதனால், பிழைக்கத் தெரியாதவர் தாம்! அன்றியும், நடிக்கவும் பசப்பவும் புகழ்பாடவும் அடி பிடிக்கவும் தெரியாதவர் தாம்! எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித் தான் வாழவேண்டும் என்று வரம்பு கொண்டவர் தாம். "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று உரமுற்றவர் தாம்! இவர்க்கு மட்டுமா இந்நிலை?

கப்பலோட்டத் துணிந்த வ.உ.சி. நிலை என்ன?