உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

87

சேர்ந்தவர். அன்னார்க்கு நன்மக்கள் மூவர் பிறந்தனர். அவர்கள்: சிதம்பரம், உலகநாதன், குமாரசாமி என்பார்.

குமாரசாமி இளமையிலேயே இயற்கை எய்தினார். சிதம்பரம் வழக்கறிஞராகிப் பேரும் புகழும் பெற்றுத் தம் இருபத் தெட்டாம் அகவையில் இயற்கை எய்தினார். அவரைப் போன்றே புகழ் வாய்ந்த வழக்கறிஞராக விளங்கி, நெடுங்காலம் வாழ்ந்தவர் உலகநாதர் ஆவர்.

உலகநாதர் அன்பு மனைவியார் பரமாயி அம்மையார் என்பார். அவர் திருவயிற்றில் 5-9-1872ஆம் நாள் பிறந்த குழந்தையே நம் சிதம்பரனார் ஆவர்.

பெரிய தந்தையார் சிதம்பரனார் இறந்த கவலையில், தாயும் தந்தையும் தத்தளித்தனர். அவர்களுக்கு ஆறுதலாக, "அச் சிதம்பரனாரே இக் குழந்தை வடிவாகப் பிறந்துள்ளார்! அவர் பெயரையே இக் குழந்தைக்கும் இடுவோம்" என்று கூறி இப் பெயரைச் சூட்டினார் உலக நாதர். உலகநாதரின் உள்ளார்ந்த அன்புக்கும் உயர்ந்த அறிவுக்கும் இப் பெயர் சூட்டுதல் சான்றாக விளங்கிற்று.

சிதம்பரனார், வீரப்பெருமாள் அண்ணாவியார் பள்ளியில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்றார். அந்நாளில் ஒட்டப் பிடாரத்தில் ஆங்கிலம் கற்பதற்கு ஏற்ற பள்ளியில்லை. அதனால் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்தார் உலகநாதர். ஒரு மகனுக்குச் செய்த கல்வி ஏற்பாடு, ஊருக்கே பயன்படுவதாக அமைந்தது. உலகநாதர் பெருங்குணம் அது! சிதம்பரனார் பிறந்த சிறப்பும் அது.

அறம் வளர்த்த நாத பிள்ளை என்பார் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். அவரிடம் கற்றுத் தெளிந்த சிதம்பரனார் தூத்துக்குடி சேவியர் உயர்பள்ளியிலும், கால்டுவெல் உயர் பள்ளியிலும் கற்றுப் பள்ளியிறுதித் தேர்வை முடித்தார்.

சிதம்பரனார் இளமையிலேயே அறிவு வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் சீராகப் பேணினார். அறிவு வளர்ச்சி யுடையோர் உடல் வளர்ச்சியைப் பேணுவதும், உடல் வளர்ச்சி யுடையோர் அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டுவதும் அரிதாகும். அவ் விரண்டையும் ஒருங்கே வளர்த்தல் கடமை எனக் கொண்டு போற்றினார் சிதம்பரனார்.