உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

இருந்தார். சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக மும்முறை தேர்ந்டுெக்கப் பெற்றுக் கடமையாற்றினார்.

கோவை கிழார், தேவாங்கர் இனத்தைச் சேர்ந்தவர். அவ்வினத்தார் படிப்பில் அவ்வளவாக அந்நாளில் அக்கறை காட்டினர் அல்லர். அதனால் அறிவறிந்த கிழார் அந் நிலையை மாற்றியமைக்க விரும்பினார். சமூகக் கூட்டங்களைக் கூட்டி நல்லறிவு கூறினார். கல்வியின் இன்றியமையாமையை எடுத் துரைத்தார். முதியோர் கல்வி பெறுவதற்கும், மகளிர் கல்வி பெறுவதற்கும் வாய்ப்பு உண்டாக்கினார். தேவாங்கர் உயர்நிலைப் பள்ளி என்னும் ஒரு பள்ளியைக் குலப்பெருமக்கள் துணையால் நிறுவினார். அதன் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். படிக்க முடியாத ஏழைச் சிறுவர்களுக்கு உதவியும், படித்துத் தேர்ந்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினார். இவர்தம் தொண்டால் நல்ல பயன்களை விரைவில் கண்டார்.

கோவையில் புலவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப் பெற்றிருந்தது. அவர் மறைவுக்குப் பின்னர், அச் சங்கம் செயலற்று நின்றது. அதனை மீண்டும் வளர்க்க முடிவு கொண்டார் கோவை கிழார். அதன் செயலாளர் ஆனார். ஆசிரியர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களிடம் பயின்ற திரு.சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தலைவர் ஆனார். இருவரும் சேர்ந்து தம் ஆசிரியர் புகழ் வளர்க்கும் சங்கத்தை நன்கு வளர்த்தனர். கோவை நகர், நற்றமிழ் வளம் சுவைக்கத்தக்க கடமைகளைத் தேர்ந்து தேர்ந்து செய்தது தமிழ்ச் சங்கம்.

மயிலத்திலும், தருமபுரத்திலும் தமிழ்க் கல்லூரி தொடங்கும் ஆர்வம் இருந்தது. அதனை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார் கோவைகிழார். அதன் பின்னர்த் திருப்பேரூரில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி தோற்றுவிக்க முழுமையாக ஈடுபட்டார். சாந்தலிங்கர் உயர்நிலைப் பள்ளியும் தோன்றுவதற்கு ஆவன செய்தார். தம் பணியைக் கல்விப் பணியாகவே அமைத்துக் கொண்டார் அறவோர் கோவை கிழார். கல்விப் பணியே கடவுள் பணி அன்றோ!

கோவைகிழாரின் ஆற்றலையும் அயரா உழைப்பையும் அறிந்த பெருமக்கள் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியின் முதல்வராக அவரே இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தினர்.