உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

107

தம் முதுமையிலும் அன்பர் வேண்டுதலைத் தட்டாமல் அவர் ஏற்றுக்கொண்டார். அறிவுத் தொண்டு அக் கல்லூரிக்கு அவர் செய்தார். பணமும் அக் கல்லூரிக்கு வேண்டியதாக இருந்தது. ஆதலால், கல்லூரிப் பொருளாளராகவும் கோவைகிழாரே இருந்தார். தாம் பெற்ற தமிழ்ச்செல்வியாம் கல்லூரியைத் தாய்போல் இருந்து பலவகைகளாலும் பேணி வளர்த்தார். பல்வேறு கட்டடங்களை எழுப்பினார்; விடுதிகள் உண்டாக்கினார்; தம்மிடம் இருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைப் பேழையுடன் சேர்த்துக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார்.

கோவை கிழார் கல்லூரிப் பணியிலிருந்து தம் முதுமையால் ஓய்வு பெற்றார். ஆயினும் வாரந்தோறும் சென்று வகுப்பு எடுத்தலை விடுத்தார் அல்லர். அவர்தம் தொண்டுள்ளம் அத்தகையது! பிறவி ஆசிரியர் கடைசி மூச்சுவரை அறிவுத் தொண்டு செய்தல் தவிரார் என்பதற்குக் கோவைகிழார் தக்க சான்றாவர்.

கோவைகிழார் போதக ஆசிரியர் மட்டும் அல்லர். இதழாசிரியராகவும், நூலாசிரியராகவும் விளங்கினார். 'கொங்கு மலர்' என்னும் மாத இதழின் ஆசிரியராக இருந்து நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். கொங்கு நாட்டைப்பற்றிய 'கலைக்களஞ்சியம்' என்று அறிஞர்கள் பாராட்டுமாறு அவ்விதழ் வெளிப்பட்டது. சென்னையிலிருந்து வெளிவரும் 'சித்தாந்தம்’ என்னும் திங்களிதழின் ஆசிரியராக ஆறாண்டுகள் பணிபுரிந்தார். அரிய வரலாற்றுக் குறிப்புகளும், சமய நுண்மைகளும் அவ்விதழ்வழி வெளிப்பட்டன.

நூலாசிரியர் என்னும் நிலையில் கோவை கிழாருக்குத் தனிப்பெரும் சிறப்பான இடமுண்டு. பாடல்கள், உரைநடை, நாடகம், வரலாறு, கதை எனப் பல்வேறு வகைகளில் அவர்தம் நூல்கள் வெளிப்பட்டன. நாள்தோறும் தாம் கண்ட காட்சிகளைப் பாடலாகப் புனைந்தார். நாட் குறிப்புக்களைத் தவறாமல் எழுதினார்.

கோவை கிழாரின் நாட்குறிப்பு மிகச் சீரியது என்று நண்பர்களாலும், அறிஞர்களாலும் பாராட்டப்பெறும் சிறப்பினதாகும். நாட்குறிப்பு எழுதுவதைக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று தம் அன்பர்களையும், நண்பர்களையும் தூண்டினார் கோவைகிழார். அவர் ஆர்வம் அத்தகையது. கோவை