உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

119

ஓதியும் கற்றவாறே கடைப்பிடித்தும் வாழ்ந்தார். ஆதலால் ஆசிரியர் பாராட்டும் அருமை பெற்றார்.

தமிழ்மொழித் திறமை கைவரப் பெற்ற முத்து, தெலுங்கு மொழி ஆகிய மொழிகளையும் தக்கவர்கள் வழியாகப் பயின்றார். பயின்றவற்றைச் செல்வர்கள் பணத்தைப் பெட்டியில் சேர்த்துவைப்பது போலச் சிக்கென நெஞ்சில் சேர்த்து வைத்தார். நினைவு ஆற்றலில் நிகரற்று விளங்கினார்.

"ஒரு வெண்பாவை இரு முறை கேட்டால் பிழையின்றிக் கூற வேண்டும்; ஒருமுறை எழுத்தைக் கண்ணால் பார்த்தால் அதனைப் பிழையின்றி எழுத வேண்டும்; அதுவே அறிவுக் கூர்மைக்கு அடையாளம்" என்று முன்னோர் கருதினார். அக் கருத்துக்குத் தக்கவாறு முத்து விளங்கினார்.

எவராவது ஒரு வெண்பாவைக் கூறினால் அதனை மிக அக்கறையுடன் கேட்பார். "அன்பு கூர்ந்து அதனை மீண்டும் கூறுக” என்று வேண்டுவார். இரண்டாம் முறை கூறியதும் பிழையில்லாமல் திருப்பிக் கூறிவிடுவார். இத்தகைய திறமை இளமையிலேயே வாய்க்கப் பெற்றிருந்தமையால், பிற்காலத்தில் அட்டாவதானம் எனப்படும் எண்வகை நினைவுக் கலையில் தேர்ந்து விளங்கினார்.

புலமை நலமும் மனப்பாடத் திறமும் வாய்ந்த முத்துசாமி அங்கொன்றும் இங்கொன்றும் என்று நுனிப்புல் மேயாமல் நூல்களை முழுமையாக முறையாகத் தக்க புலவர்களிடம் பாடம் கேட்டார்.

திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பாரதம், இராமாயணம் முதலிய இலக்கிய நூல்களையும், தொல் காப்பியம், நன்னூல், அகப்பொருள், புறப்பொருள் ஆகிய லக்கண நூல்களையும்; திருவிளையாடற் புராணம், கந்த புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், இலிங்க புராணம் முதலிய புராண நூல்களையும்,சைவ சமய நூல்களையும் செவ்வையாகக் கற்றுத் தெளிந்தார்.

நாட்டு வரலாற்றை ஆராய்வதிலே இவர்க்குப் பெரிதும் ஈடுபாடு உண்டாயிற்று. குறிப்பாகக் கொங்கு நாட்டு வரலாற்றை ஆராய்வதில் பெரும்பொழுதைச் செலவிட்டார். வரலாற்று நூல்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றைத் தொகுத்து ஆராய்ந்தார். வரலாற்றுத் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று