உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

121

வேளையில் எட்டுவகைச் செயல்களைச் செய்வது பெரிதும் அரிது அன்றோ! அதற்கு நினைவாற்றலும் திறமையும் மிகுதியாக வேண்டும். அக் கலையைக் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் இவர் கற்றுத் தேர்ச்சி பெற்றார். ஆதலால் இவர் புகழ் மேலும் பெருகுவதாயிற்று.

புலமைநலம் பெற்ற இவர் இயற்றிய நூல்கள் பல. அவற்றுள் திருச்செங்கோட்டு மான்மியம், திருப்பணி மாலை,மும்மணிக் கோவை, கொங்கு மண்டல சதக உரை என்பன குறிப்பிடத்தக்கன.

இயற்றமிழ்ப் புலமை அன்றி இவர்க்கு இசைத் தமிழிலும் சிறந்த புலமை உண்டு. ஆதலால் அமர்நீதி நாயனார் வரலாறு, சண்டன் வரலாறு, புரந்தரதாசர் வரலாறு, சக்குபாய் வரலாறு ஆகிய வரலாறுகளை இசைப்பாட்டில் அமைத்தார். இசையரங்கு களில் இவ் வரலாறுகளைப் பாடி இன்புறுத்தினார்.

இவர்தம் புலமைநலமும் தமிழ்த்தொண்டும் எங்கும் பரவின. அதனால் சேதுபதி அரசர் இவரை இராமநாதபுரத்துக்கு அழைத்துப் பெரும்பொருள் வழங்கிப் பொன்னாடையும் போர்த்தினார். திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் அம்பலவாண தேசிகர் அம் மடத்தில் இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். அக் காலப் பெரும் புலவர்களாகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் முதலியவர்களால் பாராட்டப் பெறும் பெருமை பெற்றார்.

இவருக்குச் சைவசமயத்தில் மிகுந்த பற்றுண்டு. முருக வழி பாட்டிலும் முதிர்ந்திருந்தார். திருச்செங்கோட்டுத் திருக்கோயிலில் சில திருப்பணிகள் செய்துள்ளார்.

“ஒழுக்கமே விழுப்ப மேலாம்

உணர்ச்சியும் இல்லாப் பொல்லாப்

புழுத்தநாய் அனைய ரேனும்

புண்ணியா முருகா என்று

வழுத்துவோர் துயரம் ஏக வான்மறை பொழிதல் மான பழுத்தநல் வரத்தை ஊற்றும்

பணிகிரி குகனை உள்வாம்"

என்பது இவர் திருமுருகன்மேல் பாடிய ஒரு பாட்டு.