உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

ஒருமுறை,திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் கோவையில் உரையாற்றினார். அப்பொழுது ஆதிசங்கரர் அருளிய ஒரு பாடலை உருக்கமுடன் பாடி உரை கூறினார். அப் பாட்டும் உரையும் நடேசனாரைக் கவர்ந்தன. அதனால், வடமொழி கற்கும் ஆர்வம் மிகக் கொண்டார். அதனால், பெரும்புலவர் அனந்த நாராயண சாத்திரி அவர்களிடம் வடமொழி நூல்களைப் பயின்றார். அப் பயிற்சியால் வடமொழி நூல்கள் பல தமிழாக்கம் பெற்றன.

நடேசனார் வாழ்வு தமிழ்வாழ் வாயிற்று. இளமையிற் பெரும்பாலும் தமிழ்க் கல்வியிலே ஈடுபட்ட அவர் 25 ஆண்டுகள் கோவை நகராண்மைக் கழகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிசெய்தார். ஈராண்டுக் காலம் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்தார்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் ஓய்ந்தார் அல்லர். பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் சில ஆண்டுகள் பணிசெய்தார். இவரிடம் தனியாகக் கற்றுச் சிறப்புற்று மேனிலையுற்றோரும் மிகப் பலராவர்.

பெரும்புலவர் நடேசனாரின் புலமைத் திறத்தைப் புலமையாளர் பலர் அறிந்து பாராட்டிச் சிறப்பித்தனர். மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்துத் தலைவர் 'செந்தமிழ்க்கவிமணி' என்னும் பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தார். கோவை மெய் கண்டார் கழகத்தார் 'கவியரசு' என்னும் பட்டம் தந்து பெருமைப் படுத்தினர். தொண்டை மண்டல ஆதீனத் தலைவர், 'சித்தாந்தச் செல்வர்' என்னும் பட்டம் வழங்கி மகிழ்வித்தார். பேரூர் ஆதீனத் தலைவர் 'திருமுறைச் செல்வர்' என்னும் பட்டம் அளித்து இன்புறுத்தினார். இவ்வாறு முதுபெரும் புலவர் நடேசனார் பலர் பாராட்டுக்கும் உரியவராக விளங்கினார்.

செந்தமிழ்ச் செல்வராகிய நடேசனார் உரிய பருவத்தில் இல்லற வாழ்வு மேற்கொண்டார். இவர்தம் இனிய மனைவியார் இலக்குமி அம்மையார் என்பார். கணவர் கருத்தறிந்து கடமை ஆற்றுதலில் மிகத் தேர்ந்தவர். இல்லவள் மாண்பானால் இல்லாதது என்ன? எல்லா வகை நலங்களும் அமைந்து எடுத்துக்காட்டான வாழ்வாக வாழ்ந்தனர். இவர்தம் இனிய வாழ்வின் பயனாகப் புதல்வர் இருவரும், புதல்வியர் நால்வரும் ஆக மக்கள் அறுவர் உளராயினர். அவர்கள் கல்வி அறிவு பண்பு ஆகியவற்றால் மேம்பட்டு விளங்குகின்றனர்.