உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

139

கவியரசர் சைவ நெறியில் அழுத்தமான பற்றுடையவர். நாள் தவறாமல் திருமுறை ஓதுதலை வழக்கமாகக் கொண்டவர். இறைவனையும் இறைவனடியாரையும் பாடுதலை அன்றிப் பிறரைப் பாடுதல் இல்லாத உறுதிப்பாட்டில் இறுதிவரை நின்றவர். இவர்தம் நண்பர் ஒருவர் தம் மகளார் புலமைத் தேர்வில் முதிர்ந்தமையை வாழ்த்தி ஒரு பாடல் பாடித் தரவேண்டும் என வேண்டினார். அப்பொழுது, "காந்தியார் தமக்கும் கையறு நிலைப்பாக் கழறிட மறுத்தது என் உள்ளம்; மாந்தரில் பிறரைக் கவிசொலிப் புகழ மனமறுக்கின்றது; என் செய்வேன்" எனக் கூறியனுப்பினார். இஃது இவர்தம் கடைப்பிடியைக் காட்டும்.

சாந்துணையும் கற்க வேண்டும் என்பதனைக் கடைப் பிடியாகக் கொண்டவர் கவியரசர். ஒருமுறை காசிக்குச் சென்றிருந்த தவத்திரு இராமசாமி அடிகளார், 'சிவமகா புராணம்' என்னும் வடமொழி நூலை வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அதனைக் கண்டு பேருவகை கொண்டார் கவியரசு. பிறவிப் பேற்றை யடைந்ததாக மகிழ்ந்தார். வடமொழி கற்ற பயனை முற்றும் அடைந்ததாக உவந்தார். அதனை வழங்கிய இராமசாமி அடிகளை, "இவ்வேடு கொண்டு வந்த கொடைக்குக் கைம்மாறு உண்டோ?" என்று பாராட்டினார். நடேசனாரின் நன்றி பாராட்டும் நெஞ்சம் மூன்று பாடலாக வெளிப்பட்டது.

"பிறவா வரம் வேண்டும்" என்று வேண்டுபவர் கவியரசு. ஒருகால் இறைவன் திருவுள்ளம் பிறவி அருளுவதாயின் கடக்க முடியுமோ? அதனால், இறைவனைப் பன்னிப் பன்னி வேண்டினார்: "இறைவனே, எனக்குப் பிறவி அருளுவதாக இருந்தால் தமிழ்நாட்டிலே பிறக்கச் செய்! என் அடியராக இருப்பார் குடியிலே பிறக்கச் செய்! சித்தாந்த நெறியைக் கடைப்பிடிக்கச் செய்! வீணே வாதிட்டு வெறும் பொழுது போக்காமல் உன் அடித்தொண்டு செய்தற்கே ஆளாக்கு! இவையே என் ஆவல்!'

இறைவன்மீதும், இறைவனடியார் மீதும்

எண்ணற்ற

பாடல்களைப் பாடினார் கவியரசு. தனித்தனி நூல்களும் செய்தார். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தார்.சில நூல்களுக்கு உரை எழுதினார். ஆங்கில நூல்கள் சிலவற்றையும் மொழிபெயர்ப்புச் செய்தார். இவ்வகைகளால் ஏறக்குறைய நாற்பது நூல்களைப் படைத்துள்ளார் கவியரசு.