உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புலவர் குழந்தை

பெற்ற தாய், பிறந்த நாடு,பேசும் மொழி ஆகிய மூன்றும் தாய் என்று கூறினார் தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார். அக் கூற்றின்படியே வாழ்ந்து காட்டிய புலவர் பெருமக்களுள் புலவர் குழந்தை சிறந்த ஒருவர் ஆவர்.

அறிஞர் அண்ணாவை அறியாதார் இலர். அவர், 'புலவர் தோழர்!' அவர் பெயர் சொல்லாமல் 'புலவர்' என்றால் புலவர் குழந்தை அவர்களையே குறிக்குமாறு புகழ் வாய்ந்தவர் என்றால் இவர்தம் சிறப்புப் புலனாகும்.

ஈரோட்டிற்குத் தெற்கே பதினாறாவது கல்லில் ஓலவலசு என்பதொரு சிற்றூர் உளது. அவ்வூரில் பண்ணையார் குடும்பம் ஒன்றுள்ளது. 'ஓலவலசுப் பண்ணையார் குடும்பம்' என்ற அளவிலே அவ் வட்டாரத்தார் நன்கு அறியக்கூடிய செல்வாக் குடையது அக் குடும்பம். அக் குடும்பத்தில் 1-7-1906இல் பிறந்தார் புலவர் குழந்தை. இவர்தம் தந்தையார் முத்துசாமிக் கவுண்டர் தாயார் சின்னம்மையார்.

று

குழந்தை இளம் பருவத்தில் திண்ணைப் பள்ளிக்குச் சென்று படித்தார். ஆண்டுக்கணக்கில் படித்தாரல்லர். நான்கு ஆண்டுக் காலத்தில் இடை இடையே நிறுத்தி எட்டுத் திங்கள் அளவே படித்தார். எழுத்தறிவைக் கூட ஒழுங்காகக் கற்றிருக்க இயலாதே! ஆனால் இளைய குழந்தை பத்தாம் வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார். ஓர் இசைப் பாட்டைக் கேட்டால் போதும். அப்பாட்டின் அமைப்பிலே புதுப்பாட்டு இயற்றி உடனே பாடுவார். பாட்டு இயற்றுவதைப் பொழுதுபோக்கு விளையாட்டாகக் கொண்டவரே பின்னாளில் பெரும் புலவராக விளங்கிய குழந்தை ஆவார்.

குழந்தையின் இசைப் பாட்டைக் கேட்டுப் பெரியவர்கள் பாராட்டினர்.ஆனால், பாட்டிற்கு இலக்கணம் வேண்டும் அல்லவா!