உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

களைத் திருத்தித் தந்து அறிவுரை கூறுவார். தவறாகப் பாட்டு எழுதுவதால் எழுதுபவர்க்கு உண்டாகும் இழிவைச் சுட்டிக் காட்டுவார். முயற்சி எதுவும் செய்யாமல் தமிழைக் கெடுத்துக் குறுக்கு வழியில் கவிஞராகப் புகழ் பெறுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். அத்தகையவர்களை இடித் துரைத்து வழிப்படுத்துவார். மொழிநலங் காப்பார்க்கு இத் தன்மைகள் வேண்டும் அல்லவா!

"நாவண மல்கிய நல்லாசான்" என்று பாவேந்தர் பாரதி தாசனாரால் பாராட்டப் பெற்றவர் புலவர் குழந்தை. 'கம்பனை வெல்லுங் காவியம் பாட வல்லவர்' என அறிஞர் அண்ணாவினால் பாராட்டப் பெற்றவர் புலவர் குழந்தை. அவர்தம் பெருமையையும் தொண்டையும் தமிழ் உள்ளங்கள் மறந்து போகுமா?

பவானிக் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகத்தார் பொதுக்கூட்டம் நடத்திப் புலவரைப் பாராட்டினர். அப்பொழுது புதுவை முதல்வர் பரூக்மரைக்காயர் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். விழுப்புரம் பகுத்தறிவுக் கழகத்தார் பாராட்டுக் கூட்டம் நடத்தித் தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர். இவ்வாறே பல்வேறு இடங்களிலும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றார் புலவர் குழந்தை.

தம் வாழ்வைத் தமிழ்க் காவியம் ஆக்கிக்கொண்ட புலவர் குழந்தை 25-9-1972ஆம் நாள் இயற்கையோடு இரண்டறக் கலந்தார். இனிய தமிழுடன் இரண்டறக் கலந்த அப் புலவர் பெருமகனார் என்றும் வாழ்வார்.