உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

பேணும் மகவாய்ப் பிறந்தேன்யான் - பூணற்கு

அரிய புகழ்சேர் அரங்கசா மிக்குப் பிரிய மருகாகப் பிறந்தேன் யான்;”

என்றும்,

“தந்தை இறந்தொழியத் தாயார் பிறந்தகத்தில்

வந்து வளர்க்க வளர்ந்தேன்யான்;'

என்று நயமாகப் பாடியுள்ளார்.

இளமையிலே தந்தையை இழந்தாலும் கந்தசாமியார் கல்வியை இழந்தார் அல்லர். மிக ஈடுபட்டுக் கல்வி கற்றார். பள்ளியில் பயிலும்போதே பைந்தமிழ்மேல் அளவு கடந்த பற்றுக் கொண்டார். ஆதலால் தமிழ்க்கல்வியில் தேர்ச்சிபெற்ற ஆசிரியரை அணுகித் தனிப்பாடம் கேட்க ஆவலுற்றார்.

அக்காலத்தில் திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர் என்னும் பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவரிடம் தமிழ்க்கல்வி கற்றுச் சிறப்புற்ற மாணவர்கள் பலர். அவர்களுள் ஒருவர், சந்திரசேகரன் பிள்ளை என்பார். அச் சந்திரசேகரன் பிள்ளையை அடுத்துக் கல்வி கற்றார் கந்தசாமியார்.

சந்திரசேகரன் பிள்ளை இலக்கிய இலக்கணங்களில் மிகத் தேர்ச்சி பெற்ற புலவர். கந்தசாமியார் அவற்றைக் கற்பதில் தணியாத ஆர்வம் உடையவர். ஆதலால், கற்பிப்பவர்க்கும் கற்பவர்க்கும் இடையே தமிழ்க் கல்வி இன்பத் தென்றலாகத் தவழ்ந்தது. கந்தசாமியார் நாளடைவில் கல்வியில் மிகத் தேர்ந்து புலவர் பாராட்டும் புகழுடையவராக விளங்கினார்.

'தேனை விரும்பித் தேனீச் செல்வது இயல்பு அல்லவா?' அதுபோல், புலமை உடையவரைப் புலமை உடையவரே அறிவர். கந்தசாமியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் உலகில் பெரும்புகழோடு உலாவந்த புலவர் பெருமக்கள் பலர் ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர் என்பவர்கள். இவர்களின் இனிய நட்புக்கு உரியவராகக் கந்தசாமியார் விளங்கினார். ஆதலால், புலமை சிறந்த கந்தசாமியார் அரிய தமிழ்த் தொண்டு செய்தற்கும் விரும்பினார்.