உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

149

பள்ளியில் கற்ற கல்விமுறையால் கந்தசாமியார் வழக்கறிஞர் ஆனார். கோவை 'முன்சீப்' நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதில் வருவாயும் மிகுதியாகக் கிடைத்தது. ஆயினும், அத் தொழில் புரிவதையே வாழ்வாகவும், அவ் வழியில் பொருள் திரட்டி வாழ்வதையே குறியாகவும் கொண்டார் அல்லர். தீந்தமிழ்த் தொண்டும், தெய்வத் திருத்தொண்டும் செய்வதிலேயே அவர் உள்ளம் ஈடுபட்டது. அழியா வாழ்வுடையது தொழில் இல்லையே! தொண்டுதானே என்றும் நிலைக்கும் பெருமை யுடையது!

கற்பித்தல் தொண்டு

கந்தசாமியார் தாம் அரிதில் கற்ற கல்விச்செல்வம் யாருக்கும் பயன்படாமல் தம்மோடு நின்றுவிட விரும்பவில்லை. தமிழ் கற்கும் ஆர்வமுடையவர் சிலரை அன்போடு அழைத்து அவர்களுக்கு அருந்தமிழ் அமுது ஊட்டினார். ஓர் அன்னை தன் பிள்ளைகளிடத்துக் காட்டும் அன்பினைப் போல மாணவரிடத்து இவர் பரிவு காட்டிப் பைந்தமிழ் கற்பித்தார். அரிய செய்திகளை யெல்லாம் எளிமையாக விளக்கிக் கற்பவர் உள்ளங்களை மகிழ்ச்சியடையச் செய்தார். ஆதலால் கந்தசாமியார் நடுவூருள் பழுத்த நன்மரம்போல எல்லாருக்கும் பயன்பட்டு விளங்கினார். தாமே கற்பித்ததோடு தகுதி வாய்ந்த தமிழ் அறிஞர்களை அவ்வூருக்கு வருமாறு அழைத்து அவர்களைக் கொண்டு சொற்பொழிவாற்றவும் தக்க ஏற்பாடு செய்தார்.

கந்தசாமியார் தம் இருபத்தெட்டாம் வயதிலே அஃதாவது கி.பி. 1866ஆம் ஆண்டிலே 'சொற்பொழிவு மன்றம்' என ஒரு மன்றம் அமைத்தார். அதற்குச் 'சைவப் பிரசங்க சாலை' என்ப து பெயர். நிலையான தொண்டுக்கு நிலைத்த அமைப்பு ஒன்று வேண்டும் அல்லவா! காலை ஊன்றிக் கொள்ளாமல் நிற்பதற்கு முடியுமா? சைவப் பிரசங்கசாலை செய்த தொண்டுகள் மிகச் சிறந்தனவாகும்.

முதற்கண் சைவப் பிரசங்கசாலைக்கு ஒரு கட்டடம் எழுப்பப்பெற்றது. அதில் நாள்தோறும் வழிபாடு செய்வதற்கு திட்டம் வகுத்து, அது நன்கு நடத்தப்பெற்றது. திங்கட்கிழமை தோறும் சிவபுராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. அவ்வப்போது அடியார் திருநாள்களும், விழாக்களும் நடாத்தப்