உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

பெற்றன. அவற்றின் சார்பிலே பெரும் புலவர்கள் அழைக்கப் பெற்றுச் சொன்மழை பொழிந்தனர். இதனால் கோவை நகரை அன்றிப் பக்கலிலுள்ள ஊர் மக்களும் அறிந்து போற்றும் அருமை நிலையமாகவும், அன்பு நிலையமாகவும் திகழ்ந்தது சைவப் பிரசங்கசாலை.

இசைக்கு வயப்படாதவர் எவரும் இலர். பறவையும், பசுவும், பாம்பும் இசைக்கு வயப்படுதலை அறிவோம். இப்பொழுது செடி கொடிகளும்கூட இசைக்கு இன்புறுவதை ஆராய்ந்து வெளிப் படுத்தியுள்ளனர். இத்தகைய இசையால் இறைவழிபாடு செய்ய விரும்பினார் கந்தசாமியார். அதிலும் இளைஞர்கள் உள்ளத்தில் இவ் வுணர்வு ஏற்பட்டால்தான் என்றும் நிலைக்கும் எனத் தெளிந்தார். அதனால், தேவாரப்பாடசாலை ஒன்று ஏற்படுத்தினார். தேர்ச்சிமிக்க ஓதுவார்களைக் கொண்டு தேவார வகுப்பு நடத்தினார்.

கோயில் திருப்பணி

கோவை வட்டத், திருக்கோயில் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார் கந்தசாமியார்; வாழ்நாள் அளவும் அப் பொறுப்பில் இருந்து அரிய பணிகள் செய்தார். சைவசமயத்தில் ஆழ்ந்த பற்றுடைய அவர், அப் பணியினால் செயற்கரிய செயல்களைச் செய்தார்.

கோவையை அடுத்துள்ள திருப்பேரூர்த் திருக்கோயிலைச் சார்ந்த 'சுவாமி கோயில்அம்மை கோயில்' ஆகியவற்றை முழுமையும் கருங்கல் திருப்பணியாகச் செய்தார். கோயிலுக்கு வேண்டும் அணிகலங்கள், ஊர்திகள் ஆகியவற்றையும் செய்தார். திருவிழாக்கள் சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்தார். காலவேச்சுரத் திருக்கோயில் முழுமையும் இவர் செய்த திருப்பணியால் அமைந்ததே ஆகும்.

பேரூர்த் திருக்கோயிலுக்கு உரிமையாக இருந்த ஒரு சிற்றூரும் நிலங்களும் வேறு மக்களால் இருபதாண்டுகள் வரையில் பறிமுதல் செய்யப்பெற்றிருந்தன. அவ் வூரையும் நிலங்களையும் மீட்டுத் திருக்கோயிலுக்கு உரிமையாக்கினார். பேரூர்க் கிராமத்தைச் 'சர்வமானியம்' ஆக ஆக்கவும் செய்தார்.