உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

நூல்களைப் பதிப்பித்தலும், இயற்றுதலும்

151

கற்பன கற்றுக் கனிந்த கந்தசாமியார் சைவசமய நூல்கள் சிலவற்றை நுட்பமாக ஆராய்ந்தார். அவற்றைப் பொதுமக்கள் கற்று நன்மையடையுமாறு, பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

ம்

கோயில்களைப் பற்றிய பழைய வரலாறுகளையும் செவிவழிச் செய்திகளையும் தொகுத்துக் கூறும் நூல் 'தலபுராணம்' எனப்படும். கந்தசாமியார் திருப்பேரூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருக்கருவூர், திருநணா (பவானி) ஆகிய திருவூர்களுக்குரிய புராணங்களை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்தார். தாமேயும் சில நூல்களை இயற்றினார். அவ் வகையில் வெளிவந்தவை : திருப்பேரூர்க் கிள்ளைவிடுதூது, பச்சைநாயகி அம்மையார் ஊசல், திருப்பேரூர் மும்மணிக்கோவை, மரகதவல்லிமாலை முதலிய பதினொரு நூல்கள் ஆகும்.

'கொடுமுடி'த் திருக்கோயில் செய்திகளைத் தொகுத்து தலபுராணம் பாடத் தொடங்கிச் சில பகுதிகள் பாடினார். பின்னர் இவரிடம் பயின்ற மாணவர் வேங்கடரமணதாசர் என்பவரால் பாடி அது நிறைவு செய்யப்பெற்றது.

இல்வாழ்வும் இறுதியும்

கந்தசாமியார் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமனைவியாராக வாய்த்தவர் வடிவம்மை என்னும் பெயருடையவர் ஆவர்.

இவர் தம் கணவர் குறிப்பறிந்து நடக்கும் பண்பு மாண்பு உடையவராக விளங்கினார். ஊர்ப்பணியில் ஈடுபட்டவர்க்கு ஓய்வு ஒழிவு உண்டா? அவரைக் காண வருவார்க்குக் கணக்கும் உண்டா? இத்தகைய கந்தசாமியாரின் இல்வாழ்க்கைத் துணைவியாராக அமைந்த இவ் வம்மையார் அயராது உழைப்பவராகவும், விருந்து ஓம்புதலில் விருப்புடையவராகவும், அன்புக்கு எடுத்துக் காட்டானவராகவும் விளங்கினார். இவர்தம் திருவயிற்றிலே பிறந்த மைந்தரே, பின்னாளில் சி.க. சுப்பிரமணிய முதலியார் ஆவர். 'தந்தையறிவு மகனறிவு' என்பதற்கு ஏற்பவும், 'தாயைப் போலப் பிள்ளை' என்பதற்கு ஏற்பவும் உயர்பண்புகளே ஓருருக்கொண்டாற் போன்று விளங்கிய சிவக்கவிமணியைப் பெற்றெடுத்த பெற்றோர் களின் பேற்றுக்கு இணையான பேறு உண்டோ? அவர்கள் மேற்கொண்ட இனிய இல்வாழ்க்கையின் பயனே சைவசமயத்திற்கு அழியாத்தொண்டு செய்யும் அருமை மகனைத் தந்தது எனின் அத்தகைய இல்லறம் அன்றோ நல்லறம்!