உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

3

அவரைத் தம் மாமனார் வழியாக அன்புடன் வேண்டிச் சோழவந்தானுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். அவரைச் சோழவந்தானில் இருந்த கிண்ணி மங்கல மடத்தின் தலைவர் ஆக்கினார்.

சிவப்பிரசாச அடிகள் சோழவந்தான் கிண்ணி மங்கல மடத்திற்கு வந்ததும் அம்மடம் 'தமிழ்க் கோயில்' ஆயிற்று. பக்கமெல்லாம் மணம் பரப்பும் 'தமிழ்ப் பூஞ்சோலை'யும் ஆயிற்று. அக் கோயிலும் சோலையிலும் அமைந்து உலாவினார் அரசஞ் சண்முகனார். அவர் இளமையிலே பெற்றிருந்த இனிய தமிழ்ப் புலமை, அடிகளார் தொடர்பால் மிக ஏற்றம் பெற்றது. 'இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர்' என்றும் "இலக்கணக் கடல்" என்றும் சான்றோர் புகழும் பெருமையைச் சண்முகனார்க்கு வழங்கியது.

46

சிவப்பிரகாச அடிகளிடம் சண்முகனார் தன் பதின் மூன்றாம் வயது முதல் பதினாறாம் வயது முடிய நான்கு ஆண்டுக்காலம் கற்றார். அக்காலத்திலேயே கற்றோர் மதிக்கும் கவிஞராகத் திகழ்ந்தார். அவ்விளமைப் பருவத்திலேயே 'சிதம்பர விநாயகர் மாலை' திருவடிப் பத்து முதலிய நூல்களை இயற்றினார். 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பதற்கு ஏற்றவாறு அறிவில் சிறந்து விளங்கினார். ஆசிரியர் பாராட்டும் அறிவார்ந்த மாணவராகச் சிறந்தார்.

சண்முகனார்க்குப் பதினாறாம் வயது நடந்து கொண்டி ருந்தது.அப்பொழுது அவர் தம் அருமைத் தந்தையார் அரசப்பர், ஆறாத் துயரில் குடும்பத்தை ஆழ்த்தி இறைவனடி சேர்ந்தார். தலைவரை இழந்த குடும்பம் தவித்தது. கல்வியே செல்வமாகக் கருதிக் கழனிப் பணியை அறியாத சண்முகனார் கலங்கினார். குடும்பத்தில் தலைமகனார் அவர் அல்லரோ! ஆனால், அருமை அன்னையார் தம் ஆறாத் துன்பத்திற்கு இடையே, தந்தையார் கடமைகளையும் தாமே மேற்கொண்டு செய்தார். குடும்பத்திற்கு முதல்வர் ஆகிய சண்முகனார்க்கு அவர்தம் அன்னையார் திருமணம் செய்து வைக்க எண்ணினார். அவ்வாறே அவ்வூரில் சிறந்த மருத்துவராக விளங்கிய சிதம்பரம்பிள்ளை என்பாரின் நன்மகளார் காளியம்மையை மணமுடித்து வைத்து இன்புற்றார்.

சண்முகனாரின் தமிழ் ஈடுபாடு, குடும்ப வறுமையைப் பொருட்டாக எண்ண வைக்கவில்லை. திருமண மகிழ்ச்சியிலே பொழுதைப் போக்கவும் விடவில்லை. தமிழ் ஆராய்ச்சியிலும்