உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-1

13

கேட்கவேண்டும்' என்பது. அதற்குரிய வாய்ப்பை எண்ணிக் கொண்டு இருந்தார். அந்த வாய்ப்பு இவ்வாறு எளிமையாகக் கிடைத்தது. தாம் ஆசிரியராகக் கொண்டு கற்க விரும்புபவரையே எடுபிடி ஆள்போல நடத்திய துயர் பண்டித மணியை ஆட்டியது! 'செருக்கு உடையவர் போலும்' என்று கூடச் சிலரை நினைக்க வைக்கும்! ஆனால், உண்மை அஃதன்று, உண்மையாக இருக்கு மானால் சண்முகனார் ஓடிப்போய் உதவி இருக்க மாட்டார்! பண்டிதமணி 'சேய்' போலத் தோன்றினார்; சண்முகனார் 'தாய்' போல விளங்கினார்! மேலே படிக்க இது விளக்கமாகும்.

சண்முகனாரிடம் தம்மைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டினார் பண்டிதமணி. “ஒருவர்க்கு ஒருவர் உதவியாக வாழ்வதே கடமை" என்று தேற்றினார் சண்முகனார். வழிப் போக்கர்க்கே சுமை தூக்கிச் சென்ற சண்முகனார் பண்டித மணிக்கு உதவியதைப் பெரிது பாராட்டுவாரா?

யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் மணிமொழியைக் கேட்டிருப்பீர்கள். அதனை வழங்கியவர் கணியன் பூங்குன்றனார் என்னும் பெரும்புலவர். அவர் ஊர் ‘பூங்குன்றம்' என்பது. அவ்வூர், "பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்' என்று வழங்கப்பெற்றது. அப் பூங்குன்றம் செட்டி நாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்பது ஆகும். இன்றும் அவ்வூர் அம்மன், 'பூங்குன்ற நாயகி' என்றும், ஐயனார், 'பூங்குன்ற ஐயனார்' என்றும் வழங்கப்படுகின்றனர். பழம் பெருமை வாய்ந்த அவ்வூர்க்குப் புதுப் பெருமையும் சேர்ப்பவர் போலப் பண்டிதமணி தோன்றினார்.

மகிபாலன்பட்டியில் முத்துக்கருப்பன் செட்டியார் என்பார் ஒருவர் இருந்தார். அவர்தம் இனிய மனைவியார் சிவப்பி ஆச்சி என்பவர். இவர்கள் செய்த நற்பேறும் தமிழ்நாடு செய்த தவப்பயனுமாகக் கி.பி. 1881ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினாறாம் நாள் கதிரேசனார் தோன்றினார்.

அன்னை சிவப்பி ஆச்சியாரின் சீர்மை பெரிது. அவர் தம் சிறப்புகளைக் கதிரேசனார் பின்னாளில் கனிவுறு கவிதைகளால் பாராட்டி உருகினார். "என்னைப் பெற்றெடுத்தார்; என் உடல் நலனைப் பேணி வளர்த்தார்; பெரும் புலவர் கூட்டத்துள் யான் இருப்பது கண்டு களிப்புற்றார்; சொல்லரிய நல்லுதவிகள் புரிந்தார்; என் முன்னை நல்வினையின் முதிர்ச்சியால் நெடுநாள் என்னைக் காத்தார்." ஓரன்னையின் பெருமைக்கு இதனினும் வேறென்ன வேண்டும்? அம் மைந்தருக்கும் இவ்வன்னையினும் விஞ்சிய பேறுதான் என்ன இருக்க முடியும்?