உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

கதிரேசனார் இரண்டு வயதினராக இருந்தபோது அவர்க்கு 'இளம் பிள்ளைவாதம்' என்னும் நோய் தோன்றியது.மருத்துவத்தின் சிறப்பாலும் இளமைத் துடிப்பாலும் அந்நோய் அடங்கியது. அது அவரைப் படுக்கையில் கிடத்திவிடவில்லை. இயல்பாக நடந்து திரியத் தடையில்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் ஆறு ஏழு வயதை அடைந்தார்.

மகிபாலன்பட்டியில் ஒரு திண்ணைப் பள்ளி இருந்தது. அப் பள்ளியில் கதிரேசனார் சேர்க்கப் பெற்றார். அங்கும் எவ்வளவு நாட்கள் கற்றார்? ஏழே ஏழு திங்கள் அளவே அத்திண்ணைப் பள்ளியில் கதிரேசனார் கல்வி கற்றார். "பெரும் புலவர், தென்மொழி, வடமொழித் தேர்ச்சியாளர், சிறந்த ஆராய்ச்சியாளர், சீரிய உரையாசிரியர், பெரு நாவலர்,உயர் கவிஞர் -ஆகிய கதிரேசனார் ஒரு திண்ணைப் பள்ளியில் கற்றவர் தாமா? அதுவும் ஏழு திங்கள் அளவு காலம் கற்றவர் தாமா?' என மூக்கில் விரலை வைத்து வியப்படைகிறோம் அல்லவா! இதனை அவரே சொல்கின்றார்.

"யான் ஆறு ஏழு ஆண்டு அகவை (வயது) உடையவனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக் கூடத்திலே கல்வி பயின்றேன். அப் பள்ளியிலே பாடமாகவுள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது, அச் சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோ ஒரு தெய்வத் தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று.

"மேலும், அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளி வாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடே ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் (நூல்கள்) இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். உள்ளனவாயின் அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன்.

அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. திருத் தொண்டர் புராணம், கம்பராமாயணம், சிற்சில பிள்ளைத் தமிழ் இவைகளே அவ்விளம் பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன். அப் பெரு நூல்களும் தம் செய்யுள் பொருளை இளைஞன் ஆகிய எனக்கு உலோவாது