உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பாண்டிநாட்டுப் புலவர்கள் 1

17

தெளிவாக உணர்ந்த கதிரேசனார் அம் முயற்சியில் ஈடுபட்டார். இதனை அவரே குறிப்பிடுகின்றார்.

"இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு இயல்பாகவே யான் பொருள் உணர்ந்து கொண்டேன். எனினும், இயல் நூலாகிய தொல்காப்பியம் முதலிய நூல்களோ சேனாவரையர் முதலியவர்கள் உரைகளோ என் அறிவிற்கு எட்டாத ஆழமுடையனவாக இருந்தன. என் அறிவிற்கு இயலும் துணையும் அந்நூல்களை யான் பிறர் உதவியின்றிப் படித்தேன். பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தன. எண்ணிறந்த ஐயங்கள் தோன்றின. இவ் இயல் நூல்களை ஐயம் திரிபு அறக்கற்றாலன்றிப் புலமை நிரம்பியதாகாது எனவும் அறிந்து கொண்டேன். அந்நூலின் பெயர் அறிவார்கூட அக்காலத்தே அரியராயினர். அவற்றைக் கற்க ஆசிரியர் வேண்டுமே! ஆசிரியர் எங்கே

கிடைப்பர்?

'இவ்வாறு இயல்நூல் கற்ற ஆசிரியரை யான் அவாவி இருந்த காலத்தே, திருவருளின் உதவியால் சோழவந்தான் அரசன் சண்முகனாரை யான் காண நேர்ந்தது. அவருடன் அளவளாவி நட்புரிமையும் கொண்டேன். அப் புலவர் பெருமானும் யானும் ஒத்த தகுதியுடைய நட்புரிமையே கொண்டிருந்தோம். எனினும் அவர் எனக்கு ஆசிரியரே ஆவர். அவருடைய நுண்மான் நுழை புலத்தையும் இயல்நூல் அறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன். இவர் என்னோடு என் இல்லத்திலேயே பற்பல செவ்விகளில் (காலங்களில்) பன்னாள் உடனுறைந்து இயல்நூல் அறிவில் எனக்குள்ள குறையைப் போக்கினர். இப் புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பியம் முதலிய இயல் நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின.”

இலக்கணக் கடலாக விளங்கிய அரசன் சண்முகனாரிடம் அதனைக் கற்றுத் தெளிந்த கதிரேசனார், வடமொழி கற்க விரும்பினார். அதற்குத் தருவை நாராயண சாத்திரியார் என்பவர் துணைபுரிந்தார். அவர் வழியாக வடமொழிக் காவியங்களும், நாடகங்களும் கற்றுப் புலமை நிரம்பினார்.

இருமொழிப் புலவராம் பெருமையுடன் விளங்கிய கதிரேசனார் சைவசமய நூல்களை ஆழ்ந்து கற்கும் ஆவல்கொண்டார். அதற்குச் சிவநெறிச் செல்வராகிய காரைக்குடி சொக்கலிங்கையா அவர்கள் உதவி வாய்த்தது. அதனால் அவ்வறிவிலும் நிரம்பினார்.