உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

இவ்வாறு இடையறா முயற்சியால் அடைந்த புலமைவளம் வாழையடி வாழையாகப் பயன்பட வேண்டுமே! அதற்குத் திருவருள் படிப்படியே வழி வகுத்துத் தருவதாயிற்று!

"இளஞ்சிறுவர் இனிய கல்வி பெறுதல் வேண்டும்; அதுவே நாட்டின் ஏற்றத்திற்கு வழி வகுக்கும்" என எண்ணினார் கதிரேசனார். அதனால், தம் ஊரில் வீரவிநாயகர் தொடக்கப் பள்ளியை நிறுவினார். அப்பள்ளி சிறப்பாக நடைபெறுவதற்கு வேண்டிய வாய்ப்புகளைச் செய்தார். பக்கமெல்லாம் தமிழ்மணம் பரப்ப அத்தொடக்கப்பள்ளி மட்டும் போதாது என எண்ணினார். அதனால் மேலைச் சிவபுரியில் இருந்த பெருஞ்செல்வரும் நல்லறிவாளரும் ஆகிய பழனியப்பச் செட்டியார் அவர்கள் உதவியால் 'சன்மார்க்க சபை' என்னும் ஓரவையை நிறுவினார். அது நிறுவப் பெற்றது 1909 ஆம் ஆண்டு ஆகும். சன்மார்க்க சபையின் உறுப்பாகக், 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை', 'தொல்காப்பியனார் புத்தகசாலை' என்பனவும் தோற்றுவிக்கப்

பெற்றன.

சன்மார்க்க சபையைக் கதிரேசனார் கதிரேசனார் கருதிக் கருதி வளர்த்தார். அச் சபை கதிரேசனாரைக் கவினுற வளர்த்தது. அதன் பதினாறாம் ஆண்டு நிறைவு விழாவின்போது தலைவராக விளங்கிய முதுபெரும் புலவர் சாமிநாதையரவர்கள், "பண்டிதர்கள் உலகில் பற்பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணிபோலத் திகழ்கின்றார். ஆதலின் உங்கள் முன்னிலையிலே இக் கதிரேசனார்க்கு யாம் 'பண்டிதமணி’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்றார்கள். அந்நாள் முதல் கதிரேசனார் பண்டிதமணியானார்! பண்டிதர்க்கும் மணியானார்!

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று அழைக்க வேண்டுவதில்லை. தேன் இருந்தால் வண்டை வருந்தி அழைக்க வேண்டுவதில்லை. சன்மார்க்க சபை பழமரமும், தேன்மலரும் ஆயிற்று. புலவர்களை 'வருக வருக' என வரவேற்றுப் பெருமையும் செய்தது. அதனால் தமிழ் கூறும் நல்லுலகத்துப் புலவரெல்லாரும் சபைக்கு அன்பராயினர்; தொண்டர் ஆயினர். அவர்களை அந்நிலைக்கு ஆட்படுத்திய பண்டிதமணிக்கோ, அவர் சிறப்புச் செய்யாத மேடையோ மாநாடோ இல்லை என்னும் ஒரு பரிசை உண்டாக்கினர்! அப்பரிசே, அண்ணாமலை அரசர் உள்ளத்தைக்