உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

19

கொள்ளை கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திற்குப் பண்டிதமணியை அழைத்தது; அளவிலாப் பெருமையும் கொண்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர், பேராசிரியர், ஆராய்ச்சித்துறைத் தலைவர் என்னும் பதவிகளில் பண்டிதமணி பத்தாண்டுகள் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகம், திருவாங்கூர்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் டக்குழு உறுப்பினராகவும் விளங்கினார். வேறு சில சிறப்பான பொறுப்புகளில் இருந்தும் கடமை புரிந்தார். ஆங்கிலம் அறிந்தாராலேயே செய்யத்தக்கது என்று கருதும் பொறுப்பு களையும் பண்டிதமணி சிறப்பாகச் செய்து பலரும் பாராட்டும் பெருமை பெற்றார்.

வடமொழிப்புலமையும் தமிழ்மொழித் தேர்ச்சியும் வாய்ந்த பண்டிதமணி வடமொழி நூல்கள் சிலவற்றைச் சிறப்பாக மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழி பெயர்க்கப் பெற்றவை 'மண்ணியல் சிறுதேர்', 'சுக்கிரநீதி', 'சுலோசனை', 'உதயண சரிதம்’,‘பிரதாபருத்திரீயம்”, ‘மாலதீ மாதவம்' என்பனவாம். இம் மொழிபெயர்ப்புகள் வடமொழிப் புலவர்களாலும் புகழ்ந்து பாராட்டப் பெறுகின்றன.

பண்டிதமணி அவர்கள் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடை யவர்கள். முறையாகச் சைவ நூல்களைக் கற்றுத் தெளிந்தவர்கள். அத் தெளிவு திருவாசகத்திற்கு உரை காணுமாறு தூண்டியது. அதனால் 'கதிர்மணி விளக்கம்' என்னும் உரை வெளிப்பட்டது. அவ்வுரை சமயச் சான்றோர்களின் ஒருமித்த பாராட்டுக்கும் உரியதாகத் திகழ்கின்றது.

பல்கலைச் செல்வராகத் திகழ்ந்த பண்டிதமணியினிடம் பேரன்பு கொண்டவர் அல்லரோ அண்ணாமலை அரசர்! அதனால் அவரைப் பாராட்டி அரசு அறியுமாறு எடுத்துரைத்தார். அதன் பயனாக 'மகாமகோபாத்தியாயர்' என்னும் பட்டத்தை அரசு வழங்கியது. 'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' என்னும் மொழிக்குப் பண்டிதமணி எடுத்துக்காட்டு ஆயினார்..

பண்டிதமணி கல்விப் பொருளை ஈட்டுதலிலே காலத்தைச் செலவிட்டார். ஆயினும் செல்வப் பொருளிலும் கருத்து வைத்திருந்தார். இளமையிலேயே தம் தந்தையாரை இழந்தமையால் அவர் பொறுப்பையும் தாங்கிக் குடும்பத்தை நடத்தினார். அந்நிலையில் தம் தம்பிமார்க்குத் திருமணம் தாமே முன்னின்று