உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

நடத்தினார். பின்னர்த் தம் முப்பத்தோராம் வயதில் (1912) மகிபாலன்பட்டியை அடுத்த வேகுப்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி ஆச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆச்சியார் அருங்குணங்கள் நிரம்பியவர்; வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் துணை இலக்கணம் எல்லாம் ஒருங்கே அமைந்தவர். சமையல் கலையில் தேர்ந்தவர். அவர்கள் இல்வாழ்க்கைப் பேற்றை நேரில் கண்டறிந்த பண்டிதமணியின் மாணவர் பெருமழைப் புலவர், "ஆச்சியாராதல், பண்டித மணியாராதல், தம் மக்களை இன்சொல்லால் அன்றி ஒரு பொழுதும் சுடு சொல்லாலே கண்டிப்பதில்லை; வீட்டுப் பணியாளரிடத்தும் மிக்க அன்புடையவர்களாகவே இருப்பர்; பண்டிதமணியாரின் இல்லமே ஓர் அன்புக்கடல் என்னலாம்' என்று கூறுகின்றார்.

பண்டிதமணியின் வாழ்க்கை இனிமையே உருவெடுத்தது ஆகும். 'இனிமை' என்பது என்ன? இனிமை இல்லாமை என்பது என்ன? "தீமையும் நன்மையும் பிறர்தர வருவன அல்ல! நாமே அமைத்துக் கொள்வனவே" என்று முழக்கமிட்ட கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், பண்டித மணியார் பிறந்த மண். ஆதலால் தம் வாழ்க்கையை ‘இனிமை உலகம்' ஆக்கிக் கொண்டார். இதனை, "இவரிடத்தே சுவையுலக வாழ்க்கையைக் கண்கூடாகக் காணலாம்; இல்வாழ்க்கையிலும் இனிமை; உடையிலும் இனிமை; ஊணிலும் இனிமை ; பேச்சிலும் இனிமை; மூச்சிலும் இனிமை; எழுத்திலும் இனிமை; குழுவிலும் இனிமை; இவர் பிறரைப் புகழ்வதிலும் இனிமை; இகழ்வதிலும் இனிமை" என்பார் திரு. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

பண்டிதமணி அவர்களின் இனிய இல்வாழ்வுப் பயனாக மக்கள் எழுவர் தோன்றினர். அவர்களில் ஆடவர் நால்வர்; மகளிர் மூவர்; அவர்கள் சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன்,மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என்பார். மக்கள் எழுவரும் தம் குடியின் சீரும் சிறப்பும் விளங்க இனிய மக்கட் செல்வம் எய்தி நலம்பெருக வாழ்கின்றனர்.

அன்புக் கடலாக இருந்து, இனியவை கூறி நற்றுணையாக வாய்த்த மீனாட்சி ஆச்சியார் பண்டிதமணி அவர்கள் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது 26-8-1945 இல் இயற்கை எய்தினார். அத் துயர் பண்டிதமணியைப் பெரிதும் வாட்டிற்று.தந்துணை இழந்த பண்டிதமணி பணியில் இருந்தும்