உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

என்னும் வரிசையிலும், செய்யுள் நூல்களைத் 'தமிழ்மகள் மேகலை' என்னும் வரிசையிலும், கதை நூல்களை ‘இன்பவல்லி' என்னும் வரிசையிலும்,மெய்ப்பொருள் நூல்களை ‘ஞான தரங்கிணி’ என்னும் வரிசையிலும், முற்கால நூல்களைக் 'கலைமயில் கலாபம்' என்னும் வரிசையிலும், இவற்றில் அடங்காத நூல்களைக் 'கலாநிதி' என்னும் வரிசையிலும் வெளியிட்டார்.

சென்னையில் பூரணலிங்கம் பிள்ளை என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் 'ஞானபோதினி' என்னும் திங்கள் இதழ் நடத்தி வந்தார். அவர் தம் ஆசிரியர் பணி தொடர்பாகக் கோவைக்குச் செல்ல நேர்ந்தது. அதனால் பரிதியார் அவ்விதழின் கூட்டாசிரியராக இருந்து தம் வாழ்நாள் அளவும் நடத்தினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளிவந்த 'செந்தமிழ்' என்னும் இதழில் அரிய கட்டுரைகள் எழுதினார்.

அருந்தமிழ்த் தொண்டு:

ஆங்கிலேயர் இந் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலத்திற்கே முதலிடம் தந்தனர். உள்நாட்டு மொழிகளைப் புறக்கணித்தனர். இந் நிலையில் வடமொழிப் பற்றுடையவர்கள் ஆங்காங்குக் கூடி, "வடமொழி தவிர்த்த உள்நாட்டு மொழி எதற்கும் அரசு சிறப்புத் தருதல் ஆகாது" எனத் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். அப்பொழுது இந்திய அரசுப் பொறுப்பாளராக இருந்தவர் 'கர்சன் பிரபு' என்பவர். அவர் இத்தீர்மானத்தை ஆராய்ந்து கருத்துக் கூறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

இச் செய்தியை அறிந்தார் பரிதியார். தம் நண்பர் பூரணலிங்கம் பிள்ளையை உடனே கோவையில் இருந்து சென்னைக்கு வருமாறு தொலைவரி (தந்தி) அனுப்பினார். அவர் வந்ததும், பல்கலைக் கழக உறுப்பினர்களைத் தனித்தனியே கண்டு அத் தீர்மானத்தை எதிர்க்குமாறு வேண்டிக் கொண்டனர். இவ்வாறு இவர்கள் காலத்தால் செய்த கடமையே தமிழ்மொழி கட்டாய பாடமாகும் நிலைமையைப் பெற்றது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் ஒரு தீர்மானம் செய்யுமாறு பரிதியாரே தூண்டினார். பரிதியார் செய்த பணி, தமிழ் உள்ளங்களில் எல்லாம் மிகுந்த மகிழ்வை உண்டாக்கிற்று.